​வைக்கோல் விலை சரிவு விவசாயிகள் கவலை 

​திருவாடானை: திருவாடானை பகுதியில் நெல் அறுவடைப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வைக்கோல் விலை பாதியாக குறைந்திருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருவாடானை பகுதியில் நடப்பு பருவத்திற்கான நெல் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

விவசாயிகள் இயந்திரங்கள் மூலம் நெல் மணிகளைத் திரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.​

அறுவடை ஒருபுறம் மகிழ்ச்சி தந்தாலும், உபரி வருமானமாக கருதப்படும் வைக்கோல் விலை விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு கட்டு வைக்கோல் ரூ.80 வரை விற்பனையானது.​ஆனால், தற்போது அறுவடை சீசன் என்பதால் வரத்து அதிகரித்துள்ளதை காரணம் காட்டி வியாபாரிகள் ஒரு கட்டு வெறும் ரூ. 40-க்கு மட்டுமே கொள்முதல் செய்கின்றனர்.​

விலை பாதியாக குறைந்துள்ளதால் வைக்கோலை விற்று அறுவடை இயந்திர கூலியை கொடுக்கலாம் என நினைத்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ​

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், விதைப்பு முதல் அறுவடை வரை உரம், மருந்து என அனைத்திற்கும் விலை ஏறி விட்டது.

வைக்கோல் விலையாவது கை கொடுக்கும் என்று பார்த்தால், அதையும் அடிமாட்டு விலைக்கு கேட்கிறார்கள் என்றனர்.

Advertisement