இந்திய துறைமுகங்களில் இருந்து ஈரான் மீது தாக்குதலா? வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு

10


புதுடில்லி: இந்தியாவில் உள்ள துறைமுகத்தை பயன்படுத்தி, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த இருப்பதாக அமெரிக்க முன்னாள் ராணுவ கர்னலின் கருத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கமேனி கொல்லப்பட்ட பிறகும், ஈரான் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, சவுதி அரேபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள தங்களின் ராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்தி, தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. ஈரான் மீது தாக்குதல் நடத்த ஸ்பெயினின் ராணுவ தளங்களைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி கேட்டது. ஆனால், ஸ்பெயின் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது.

இதனிடையே, இந்தியாவில் உள்ள துறைமுகத்தை பயன்படுத்தி, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த இருப்பதாக அமெரிக்க முன்னாள் ராணுவ கர்னல் டக்ளஸ் மெக்ரிகோர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் அளித்த பேட்டியில்; எங்களுடைய (அமெரிக்கா) அனைத்து ராணுவ தளங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. எங்கள் துறைமுகக் கட்டமைப்புகள் சேதமடைந்து விட்டன. நாங்கள் உண்மையில் இந்தியாவையும், இந்தியத் துறைமுகங்களையும் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம், எனக் கூறினார்.

இந்த நிலையில், வெளியுறவு அமைச்சகத்தின் உண்மைச் சரிபார்ப்பு பிரிவு நடத்திய ஆய்வில், அமெரிக்க முன்னாள் ராணுவ கர்னல் டக்ளஸ் மெக்ரிகோர் கூறியது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், "இந்திய துறைமுகங்களைப் பயன்படுத்தி ஈரான் மீது அமெரிக்க கப்பற்படையினர் தாக்குதல் நடத்துவதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டிருப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இது ஆதாரமற்ற, ஜோடிக்கப்பட்ட கருத்து என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்," இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.


Advertisement