வடமாநில ஆர்டர் குறைவால் தேங்காய் விற்பனை  சரிவு விலை குறைவதால் விவசாயி, வியாபாரிகள் பாதிப்பு


ஆண்டிபட்டி ": வட மாநிலங்களில் தேங்காய்க்கான ஆர்டர் குறைந்து வருவதால் தேனி மாவட்டத்தில் தேங்காய் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. விலை குறைவால் வியாபாரிகள் இருப்பு வைக்க தயங்குகின்றனர். இதனால் விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

மாவட்டத்தில் கம்பம், போடி, வருஷநாடு, பெரியகுளம் பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகம் உள்ளது. தென்னையில் ஆண்டு முழுவதும் காய்ப்பு இருந்தாலும் ஜூன் முதல் டிசம்பர் வரை தேங்காய் சீசன் ஆகும். கோடையில் இளநீர் தேவை அதிகம் என்பதால் தேங்காய் வரத்து குறைந்துவிடும்.

மாவட்டத்தில் விளையும் தேங்காய் காங்கேயம் மார்க்கெட் மூலம் உத்தர பிரதேசம், பீஹார் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும். கடந்த பல மாதங்களாக தேங்காய் விலை தொடர்ந்து உயர்ந்தது. ரூ.20 முதல் 30 வரையிலான விலைக்கு கிடைத்த தேங்காய் ரூ.60 ஆக உயர்ந்தது.

தேங்காய் விலை உயர்வால் பொதுமக்கள் பலரும் தேங்காய் பயன்பாட்டை குறைத்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தேங்காய் விலை குறைகிறது.

விலை குறைவதால் விவசாயிகளுக்கான நிர்ணய விலையும் குறைகிறது. வியாபாரிகளும் தேங்காய்களை கொள்முதல் செய்து இருப்பில் வைக்க தயக்கம் காட்டுகின்றனர்.

போர் அச்சுறுத்தலால் ஏற்றுமதி குறைவு தேங்காய் மொத்த வியாபாரி சரவணன் கூறியதாவது: மாவட்டத்திலிருந்து தினமும் 400 டன் தேங்காய் காங்கேயம் மார்க்கெட் செல்லும். அங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும். வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

தற்போது வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் அச்சுறுத்தலால் ஏற்றுமதி குறைந்துள்ளது. வட மாநிலங்களிலும் தற்போது விழாக்காலம் இல்லாததால் தேங்காய் ஆர்டர் குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.53 முதல் ரூ.55 வரை இருந்த தேங்காய் விலை தற்போது கிலோ ரூ.45 ஆக குறைந்துள் ளது.

விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதால் தேங்காய் விலை இன்னும் குறையும் சூழல் உள்ளது. இதனால் தேங்காய்களை இருப்பு வைக்க வியாபாரிகள் தயங்குகின்றனர்.

விவசாயிகளுக்கும் நிர்ணய விலை ரூ.25லிருந்து ரூ.18 ஆக குறைந்துள்ளது.

இளநீர் ஏற்றுமதியும் பாதிப்பு இளநீருக்கான ஏற்றுமதியும் குறைந்துள்ளதால் தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பாதிப்படைகின்றனர். ஏற்றுமதி இல்லாததால் தேங்காய் உரி மட்டை விலை ரூ.2.50ல் இருந்து ஒரு ரூபாயாக குறைந்துள்ளது.

கடந்த காலங்களில் வியாபாரிகள் மட்டைகளை முன் பணம் கொடுத்து வாங்கி சென்றனர். தற்போது தேங்காய் விலை குறைவு விற்பனையில் ஏற்பட்டுள்ள மந்த நிலை விவசாயிகள், வியா பாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது என்றார்.

Advertisement