மின் வாரியத்தினர் போராட்டத்தால் அண்ணா சாலையில் கடும் நெரிசல்

சென்னை: பணி நிரந்தரம் கோரி, மின் வாரிய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர், சிந்தாதிரிப்பே ட்டை கூவம் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால், அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது .

தமிழக மின் வாரிய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர், மின் வாரியத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சிந்தாதிரிப்பேட்டை டேம்ஸ் சாலை - மேற்கு கூவம் சாலை சந்திப்பில், கூவம் ஆற்றின் கரையோரம் நின்று, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவல்லிக்கேணி தீயணைப்பு படையினர், சிந்தாதிரிப்பேட்டை போலீசார் சேர்ந்து, அவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது, ஆற்றில் இறங்கிவி டுவதாக மிரட்டல் விடுத்தனர். இதை காண்பதற்காக, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் நின்றதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

டேம்ஸ் சாலை முதல் ஸ்பென்சர் சிக்னல் வரை, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. திருவல்லிக்கேணி, எழும்பூர் போக்குவரத்து போலீசார், நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 30 நிமிடங்களுக்கு பின், அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் சீரானது.

Advertisement