ரூ.1,085 கோடி வங்கி மோசடி; தொழிலதிபர் அனில் அம்பானி மீது சிபிஐ வழக்கு


சண்டிகர்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1085 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக, தொழிலதிபர் அனில் அம்பானி மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.


மஹாராஷ்டிராவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி. இவர் மீதும், இவரது நிறுவனத்தின் மீதும் வங்கிக் கடன் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சார்பில் பல்வேறு வழக்குக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1085 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக, தொழிலதிபர் அனில் அம்பானி மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை தலைமை மேலாளர் சந்தோஷ் கிருஷ்ணா அளித்த புகாரின் அடிப்படையில் இந்த எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது.


ஏற்கனவே 2013 - 17ம் ஆண்டுகளுக்கு இடையே, மும்பை 'பாங்க் ஆப் பரோடா' கிளையில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்' கடன் வாங்கியதாகவும், அது தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதனால், வங்கிக்கு 2,220 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.


இது தொடர்பாக அனில் அம்பானி மீதும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு எதிராகவும் சி.பி.ஐ., புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது.

Advertisement