அமெரிக்கா - தென்கொரியாவுக்கு மிரட்டல்; ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா

6

பியோங்யாங்: அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வடகொரியா 2வது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.


அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவப் பயிற்சி அண்மையில் துவங்கியது. இது தங்களின் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று வடகொரிய கருதுகிறது. இந்த சூழலில், நேற்று (மார்ச் 10) வட கொரிய ஏவுகணை சோதனையில் ஈடுபட்டதாக அந்நாட்டின் அரசு ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.


அதாவது, சோ ஹியோன் என்ற போர்க் கப்பலில் இருந்து ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக ஏவியுள்ளது. ஏவுகணை வடகொரியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள இலக்குத் தீவுகளைத் துல்லியமாகத் தாக்கியதாக அறிவிக்கப்பட்டது.


இதனை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது 14 வயதுடைய மகளும் அறையில் அமர்ந்து பார்வையிட்டுள்ளனர்.இந்த ஒத்திகையின் போது, நம்பகமான அணு ஆயுதத் தடுப்புத் திறனை பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.


தனது அரசியல் வாரிசாக மகளை கொண்டு வர அதிபர் கிம் ஜாங் உன் விரும்புவதாகவும், இதன் காரணமாகவே கடந்த 2022ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்படும் ராணுவ அணிவகுப்புகள் மற்றும் ஏவுகணை சோதனை போன்ற நிகழ்வுகளில் மகளையும் பங்கெடுக்கச் செய்வதாக உளவு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

Advertisement