வளைகுடா போரில் செல்லப்பிராணிகள் கடும் பாதிப்பு; தாயகம் கொண்டுவர இந்தியர்களுக்கு விதிகள் தளர்வு!

6

புதுடில்லி:

போரால் பாதிக்கப்பட்ட மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து வெளியேறும் இந்தியர்கள், தங்கள் செல்லபிராணிகளான நாய்கள் மற்றும் பூனைகளை தாயகம் கொண்டு வர வசதியாக விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

மேற்கு ஆசியாவில் நிலவி போர் பதற்றம் காரணமாக அங்கு வசித்து வந்த இந்தியர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். அவர்கள் வளர்த்து வந்த செல்லப்பிராணிகளை விமானத்தில் அழைத்து வர விதிமுறைகள் நிறைய இருக்கிறது. செல்லப்பிராணிகளுக்கான சுகாதார சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி தான் தாயகத்திற்கு அழைத்து வர முடியும்.


தற்போது பாதுகாப்பைத் தேடி மக்கள் வெளியேறும் சூழலில், போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் செல்லப்பிராணிகளை பெருமளவில் அங்கேயே விட்டு விட்டு இந்தியர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். இதனால் செல்லப்பிராணிகள் சிரமங்களை சந்தித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.



போரால் பாதிக்கப்பட்ட மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து வெளியேறும் இந்தியர்கள், தங்கள் செல்லபிராணிகளான நாய்கள் மற்றும் பூனைகளை தாயகம் கொண்டு வர சுகாதாரச் சான்றிதழ் உள்ளிட்ட விதிமுறைகள் ஏதுமின்றித் தங்களுடன் அழைத்துவர மத்திய அரசு விதிகளை தளர்த்தி உள்ளது.


இதைத் தொடர்ந்து, மத்திய சுங்க வாரியம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. போரால் பாதிக்கப்பட்ட மேற்கு ஆசிய நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுடன் சேர்த்து, அவர்களின் செல்ல நாய்கள் மற்றும் பூனைகளையும் தாயகம் அழைத்து வர அனுமதிக்குமாறு அனைத்துச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டது.


தற்போது நெருக்கடியான சூழலைக் கருத்தில் கொண்டு, தாங்கள் திரும்பும்போது தங்கள் செல்லப்பிராணிகளையும் தங்களுடன் அழைத்துவர அனுமதிக்க வேண்டும் என்றும், இதற்காக விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும் என்றும் தாயகம் திரும்பும் பல இந்தியர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மத்திய அரசு விதிகளை தளர்த்தி இருக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.


போரால் பாதிக்கப்பட்ட செல்லப்பிராணிகளை மீட்டுப் பராமரிப்பதற்காகப் பல விலங்கு நலக் காப்பகங்களும் அமைப்புகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பாதிக்கப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், அவற்றைச் சமாளிப்பது சவாலாக உள்ளது.


பொதுவாக, செல்லப்பிராணிகளை இந்தியாவிற்குள் அழைத்து வர பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. குறிப்பிட்ட விமான நிலையங்கள் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும்; மேலும் சான்றிதழ் இருக்க வேண்டும், கட்டாயமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

மூன்று நிபந்தனைகள்



தற்போது விதிகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மூன்று நிபந்தனைகளை மத்திய விதித்துள்ளது.



* செல்லப்பிராணி குறைந்தது கடந்த ஒரு மாதமாவது தங்களுடன் வசித்து வருவதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.


* செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசிச் சான்றிதழ், லைசென்ஸ் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.


* உரிமையாளர்கள் விமான நிலையத்தில் உள்ளூர் கால்நடை மருத்துவ அதிகாரிகளால் தங்களது செல்லப்பிராணிகளை பரிசோதிக்க வேண்டும்.

Advertisement