பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான வைரமுத்து; ஞானபீடம் விருது அறிவிப்பை எதிர்த்து எழுத்தாளர்கள் கண்டன அறிக்கை

92



சென்னை: 'தகுதியற்றவருக்கு விருது வழங்குவது தமிழ் இலக்கிய மரபுக்கு இழைக்கப்படும் அவமதிப்பு' என்று வைரமுத்துக்கு ஞானபீட விருது வழங்கும் முடிவை எதிர்த்து தமிழ் எழுத்தாளர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


சினிமா பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தமிழின் முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன் காட்டமான எதிர்வினை ஆற்றியிருந்தார். 'இது தமிழுக்கு நேர்ந்த அவமானம்' என்று அவர் கூறியிருந்தார். அவரைப் போலவே பலரும், சமூக வலைதளங்களில் கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் எழுத்தாளர்கள் 230 பேர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை;

இந்திய இலக்கியச் சூழலில் மிக முக்கியமான அங்கீகாரமாகக் கருதப்படும் ஞானபீட விருது, தகுதியான படைப்பாற்றலுக்கும், மானுட அறத்திற்கும், சமூக விழுமியங்களுக்கும் சான்றாகத் திகழும் ஆளுமைகளுக்கே வழங்கப்பட வேண்டும். அத்தகைய உயரிய விருதின் மதிப்பும், அதன் பின்னால் உள்ள தார்மீகப் பொறுப்பும் சிதையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு இலக்கியவாதியின் எதிர்பார்ப்பாகும்.

இந்த நிலையில், வைரமுத்துக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பது, அந்த விருதின் புகழுக்கும், தமிழ் இலக்கிய மரபுக்கும் இழைக்கப்படும் அவமதிப்பு என எழுத்தாளர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கருதுகிறோம்.

வணிக எழுத்தாளர்



தமிழ் சமூகம் இரண்டாயிரம் ஆண்டுகாலத் தொன்மையான அற இலக்கியங்களையும், பண்பாட்டுச் செழுமையையும் கொண்டது. ஒரு மெய்யான தமிழ் இலக்கியவாதி, இந்தப் பரந்துபட்ட பண்பாட்டுத் தன்மையையும், மண்ணின் மக்களின் ஆன்மாவையும் தனது படைப்புகளில் ஏந்தியிருக்க வேண்டும். ஆனால், வைரமுத்துவின் எழுத்துக்களில் தமிழ்ச் சமூகத்தின் ஆழமான விழுமியங்களோ, கலாசார பெருமிதங்களோ, மெய்யானத் தேடலோடு பதிவாகவில்லை. வெறும் மேலோட்டமான அடுக்குமொழிச் சொற்களால் அலங்கரிக்கப்பட்ட வணிகமயமான எழுத்துக்களே அவரது அடையாளமாக உள்ளன.

இலக்கியம் என்பது வாழ்வைச் செதுக்குவது; ஆனால் வைரமுத்துவின் படைப்புகள் பெரும்பாலும் திரைத்துறை சார்ந்த லாப நோக்கிற்காகவும், தற்காலிகப் புகழுக்காகவும் உருவாக்கப்பட்டவை. உண்மையான உணர்வுகளைப் பிரதிபலிக்காத வெறும் வார்த்தை ஜாலங்களைக் கொண்ட ஒரு வணிக எழுத்தாளருக்கு இத்தகைய உயரிய விருதை வழங்குவது, இலக்கியப் பேராளுமைகளை அவமதிப்பதாகும்.

'மீ டூ' புகார்



ஒரு படைப்பாளியின் எழுத்தைப் போலவே, அவனது வாழ்வும் முக்கியமானது. 'மீ டூ' இயக்கத்தின் வழியாக, வைரமுத்து மீது இதுவரை 17-18 பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்துப் பகிரங்கமாகப் புகார் அளித்துள்ளனர். இத்தகைய நீண்டகாலத் தார்மீகக் கறைகள் படிந்த ஒருவருக்கு, சமூகத்தின் கவுரவமான விருதை வழங்குவது பெண் உரிமை பேசும் நவீன சமூகத்திற்கு முரணான செயலாகும்.

மேலும், வைரமுத்து வெளிப்படையான ஆண் ஆதிக்கப் பார்வை கொண்டவர் என்பது அவரது பல்வேறு பொதுவெளிப் பேச்சுகள் மற்றும் படைப்புகளில் தென்படுகிறது. பெண்களை வெறும் போகப் பொருளாகவோ அல்லது இழிவுபடுத்தும் விதத்திலோ சித்தரிக்கும் இவருடைய போக்கு, சமூகத்தின் சமத்துவ வளர்ச்சிக்கு முற்றிலும் எதிரானது.

இதையும் தாண்டி, வைரமுத்துவின் பொதுவெளிச் செயல்பாடுகள், உயர்ந்து நின்ற ஆளுமைகளுக்கு எதிரான மேலாதிக்க மனநிலையைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. சமூக சமத்துவத்தையும், அறத்தையும் பேச வேண்டிய ஒரு படைப்பாளியின் இத்தகைய செயல்பாடுகள் கண்டனத்திற்குரியவை ஆகும்.

விருதுக்கு தகுதியற்றவர்



ஒரு உயரிய விருது என்பது ஒரு தனிமனிதனின் புகழை உயர்த்துவதற்காக மட்டும் அல்ல; அது நாட்டின் இலக்கிய உன்னதத்தைத் தக்கவைப்பதற்காக வழங்கப்படுவது. தகுதியற்ற ஒருவருக்கு இந்த விருது செல்வது, எதிர்காலத்தில் இந்த விருதின் மீதான நம்பகத்தன்மையையும், பெருமையையும் முற்றிலுமாக அழித்துவிடும்.

கேரளாவைப் போல...



முன்னதாக, வைரமுத்துக்கு ஓஎன்வி இலக்கிய விருது அறிவிக்கப்பட்டபோது, அவர் மீதான இத்தகைய சர்ச்சைகள் காரணமாக எழுந்த கடும் எதிர்ப்புகளால், அந்த விருதை வழங்கவிருந்த கேரள கலாசார அமைப்பு தனது முடிவைத் திரும்பப் பெற்றது. அந்த அமைப்பு மேற்கொண்ட இந்தத் தார்மீக நடவடிக்கையை, ஞானபீடக் குழுவின் முடிவில் ஒரு முக்கியமான முன்னுதாரணமாகக் கருத வேண்டியது அவசியம். குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள ஒருவருக்கு உயரிய விருதை அளிப்பது இலக்கிய மரபுகளுக்கு முரணானது என்பதால், இந்த அமைப்பின் முடிவை ஞானபீடக் குழு கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே, சமூக நீதியையும், இலக்கியத் தரத்தையும் கருத்தில் கொண்டு, இந்த விருது முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழ் எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் சார்பாக வலியுறுத்துகிறோம், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement