ஈரான் போரில் 16 ராணுவ விமானங்கள், வீரர்கள் 13 பேரை இழந்தது அமெரிக்கா!

2


வாஷிங்டன்: ஈரானுடனான போரில் அமெரிக்கா 16 ராணுவ விமானங்கள், வீரர்கள் 13 பேரை இழந்துள்ளது என ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டு உள்ளது.


மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த 28ம் தேதி துவங்கி மூன்றாவது வாரமாக போர் தொடர்ந்து வருகிறது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் அமெரிக்க படைதளங்கள் இருக்கும் நாடுகள் மீது சரமாரியாக குண்டு வீசி வருகிறது.

இந்த போரில் ஈரான் பேரிழப்பை சந்தித்து இருக்கிறது என்றாலும், அமெரிக்காவுக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டு இருப்பதை மறுக்க முடியாது. வளைகுடா நாடுகளில் இருந்த அமெரிக்க படை தளங்கள் பெரும் சேதம் அடைந்து இருக்கின்றன. அமெரிக்காவின் வான் தடுப்பு கவசங்களை ஈரான் அடித்து நொறுக்கி இருக்கிறது.



ஈரானுடனான போரில் இதுவரை அமெரிக்கா 16 ராணுவ விமானங்களை இழந்துள்ளது என ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டு உள்ளது. இழக்கப்பட்ட நான்கு விமானங்களில், குவைத் தனது படையினரின் தவறுதலான தாக்குதலில் சுட்டு வீழ்த்திய மூன்று எப்-15 ரக போர் விமானங்களும், ஒரு கே-135 ரக எரிபொருள் நிரப்பும் விமானமும் அடங்கும். கே-135 ரக எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்தில் வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர் .


மொத்தத்தில், இந்தப் போரில் குறைந்தது 13 அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 200 பேர் காயமடைந்துள்ளனர். 10 அமெரிக்க ட்ரோன்களையும் ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது. ஈரான் ஏவுதளங்கள், ட்ரோன்களை அமெரிக்க படையினர் தரைமட்டமாக்கியதாக அதிபர் டிரம்ப் தினந்தோறும் கூறி வருகிறார். ஆனாலும் போரில் அமெரிக்க ராணுவ விமானங்களை இழந்தது பேரிழப்பு தான் என்கின்றனர் அதிகாரிகள்.

Advertisement