இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் அருகே தீ விபத்து
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வழுதுார் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் அருகே ஏற்பட்ட தீ ஒரு கி.மீ., துாரத்திற்கு பரவிய நிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
வாலாந்தரவை ஊராட்சி வழுதுார் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு பூமிக்கு அடியில் கிடைக்கும் இயற்கை எரிவாயு சேகரிக்கப்பட்டு மின்சாரமாக உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.
இப்பகுதியை சுற்றிலும் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளது. நேற்று முன்தினம் சிலர் வயல்களில் தீ வைத்துள்ளனர். அது பரவியதில் ஒரு கி.மீ.,க்கு தீ பரவியது. மின்சார வாரிய அலுவலகம் பகுதியை சுற்றிலும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ வழுதுார் இயற்கை எரிவாயு சுழலி மின் நிலையத்திற்குள் பரவியிருந்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும். உரிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.