த.வெ.க., கூட்டத்தில் பறக்கும் படை சோதனை

சென்னை: சென்னையில் த.வெ.க., வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடந்த, நட்சத்திர ஹோட்டலில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், த.வெ.க., வேட்பாளர்களை, அக்கட்சி தலைவர் விஜய் நேற்று அறிமுகப்படுத்தினார்.

அக்கூட்டத்திற்கு, 500 பேர் வரை அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட, அதிகளவில் பங்கேற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து, இரண்டு வாகனங்களில் வந்த தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

த.வெ.க., வேட்பாளர்களை விஜய் அறிமுகப்படுத்தி கொண்டிருந்தபோதே, சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அத்துடன், பணம், பொருள் ஏதேனும் இருக்கிறதா எனவும் சோதனையிட்டனர். அதில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் தான் த.வெ.க.,வினர் பங்கேற்று இருந்தனர் என்பது தெரியவந்தது. ஆனால், பணம், பொருள் எதுவும் சோதனையில் சிக்கவில்லை.

Advertisement