மேம்பட்ட கரும்பு ரகங்களை பயிரிட விவசாயிகளுக்கு அழைப்பு
கோவை: அன்னூர், கஞ்சப்பள்ளியில், 'கோ 18009' என்ற புதிய கரும்பு ரக வயல் தின விழா நடந்தது.
கரும்பு இனப்பெருக்க நிறுவன இயக்குநர் கோவிந்தராஜ் துவக்கி வைத்து பேசியதாவது :
பழைய கரும்பு ரகங்கள் காலப்போக்கில் உற்பத்தித் திறனை இழந்து, நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன. இதனால், விவசாயிகளின் வருவாய் குறைய வாய்ப்புள்ளது.
எனவே, புதிய மற்றும் மேம்பட்ட கரும்பு ரகங்களான கோ 18009, கோ 11015, கோ 14012 ரகங்களை பயிரிட முன் வர வேண்டும்.
கரும்பு விவசாயிகள் லாபம் பெற, 75 சதவீதமாவது இயந்திர மயமாக்கல் நடைபெற வேண்டும். ஆய்வுகளில், விவசாயிகளையும் நேரடியாக ஈடுபடுத்த, கரும்பு இனப்பெருக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்வில், விவசாயிகளுக்கு கோ 18009 விதைக் கரணைகள் மற்றும் சாகுபடி குறிப்புகள் வழங்கப்பட்டன. விவசாயிகளின் சந்தேகங்களுக்கு, கரும்பு இனப்பெருக்க நிறுவன விஞ்ஞானிகள் பதில் அளித்தனர்.
பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை துணைத் தலைவர் சண்முக சுந்தரம், முதன்மை விஞ்ஞானி புத்திர பிரதாப், செயல் விளக்கத் திடல் விவசாயி நிவேதா, வேளாண் அலுவலர் ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.