சீமானுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்!

2

அ.குணா, கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., - தி.மு.க., என இரு திராவிட கட்சிகளுக்கு இணையாக, புதிதாக தேர்தல் களம் காண உள்ள தமிழக வெற்றிக் கழகமும் வாக்காளர்களுக்கு பல இலவச வாக்குறுதிகளை வாரி வழங்கி, ஓட்டுகளை பெற வலை வீசி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியோ இலவச திட்டங்கள் இல்லாமல் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வி, மருத்துவம், குடிநீர் மட்டுமே இலவசம் என்று கூறியுள்ளது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ஏனெனில், இன்று தரமான கல்வியும், மருத்துவமும் ஏழைகளுக்கு எட்டாத துாரத்தில் உள்ளது.

அதேபோன்று தான் குடிநீர்!

டாஸ்மாக் சரக்கு விற்பனை போன்று, குடிநீர் விற்பனையும் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த வணிகத்தை பெரும்பாலும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் தான் செய்து வருகின்றனர்.

இவை மூன்றையும் இலவசமாக தருவதாக, தன் தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தான் ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கு முழுமையாக அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

உண்மையில், பூரண மதுவிலக்கை அமல்படுத்தியும், பள்ளி - கல்லுாரிகள் அனைத்தும் அரசே ஏற்று நடத்தியும், அனைத்து விதமான உயர் சிகிச்சையும் அரசு மருத்துவமனையில் கிடைக்க செய்து விட்டால், உரிமைத்தொகை என்ற பெயரில் சில ஆயிரங்களுக்காக மகளிர் ஏன் கையேந்தி நிற்க வேண்டும்?

மேலும், பெண்களுக்கு வேலைவாய்ப்பில், ஆட்சி அதிகாரத்தில் 50 சதவீதம்; பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும், அவர்களது பிள்ளைகள் அரசு பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ள வாக்குறுதிகளை பார்க்கும் போது, உண்மையில் சபாஷ் போடத் தோன்றுகிறது.

இலவச திட்டங்களுக்கு பதில், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர்களின் அறிவையும், உடல் ஆற்றலையும் பயன்படுத்தி உற்பத்தியை பெருக்கினால் தானாகவே, அவர்கள் வாழ்வுடன், நாடும் வளம் பெறும்.

ஆனால், இரு திராவிட கட்சிகளும் அது குறித்து சிந்திக்காமல், பணத்தை வாரி இறைத்தும், இலவசங்களை முன்னிறுத்தியும் ஓட்டு கேட்கும் போது, அவர்களிடம் இருந்து மாறுபட்டு நேர்மையான முறையில் சீமான் தேர்தல் வாக்குறுதிகளை கூறி, ஓட்டு கேட்கிறார்.

அவருக்கு வாய்ப்பளித்தால் என்ன?

lll



கறையான் புற்றில் குடிபுகுந்தவர் அல்ல எம்.ஜி.ஆர்.,! டி.பாரதி ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் புதிதாக கட்சி ஆரம்பித்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, 'தொண்டர் ஒருவர் ஆரம்பித்த அ.தி.மு.க., கட்சியைத்தான் எம்-.ஜி.ஆர்., வழி நடத்தினார். அதுபோன்ற நிலைமை தற்போது எனக்கு வந்துள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது பற்று கொண்ட தொண்டர் ஒருவர் துவக்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன்' என்று கூறியுள்ளார்.

எந்த தொண்டன் ஆரம்பித்த அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., வழிநடத்தினார், எந்த தொண்டன் ஆரம்பித்த கட்சியில் சசிகலா தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் என்பதை கூறுவாரா?

தொண்டன் தன் சொந்த பணத்தை செலவு செய்-து ஆரம்பித்த கட்சியில், தலைவர் பதவியில் அமர்வதற்கு அவர் ஒன்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் அல்ல; எம்.ஜி.ராமச்சந்திரன்!

கடந்த 1967 மற்றும் 1971 தேர்தலில் பரங்கிமலை தொகுதியில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக வெற்றி, பெற்ற எம்.ஜி.ஆருக்கு, அத்தொகுதிக்குட்பட்ட அனகாபுத்துார் பஞ்சாயத்து போர்டு தலைவராக இருந்த எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான ராமலிங்கம் தான், தேர்தல் தலைமை ஏஜன்டாக செயல் பட்டார்.

ராமாவரம் தோட்டம் முன்பகுதியில், எம்.ஜி.ஆரின் எம்.எல்.ஏ., அலுவலகம் இருந்தது. தொகுதி மக்கள் அங்கு வந்து சொல்லும் பிரச்னைகளை, 'நான், எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆரின் பி.ஏ., ராமலிங்கம் பேசுகிறேன்' என்று கூறி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி பிரச்னையை தீர்ப்பார், ராமலிங்கம்.

இதனால், தன் ஒன்பது ஆண்டு கால எம்.எல்.ஏ., சம்பளத்தை அப் படியே ராமலிங்கத்து-க்கு வழங்கினார், எம்.ஜி.ஆர்.,

அதுமட்டுமல்ல... 1977ல் எம்.ஜி.ஆர்., முதல்வரான பின், ராமலிங்கத்தை மேலவை உறுப்பினராக்கினார். மேலவையை கலைத்த பின், அவரை கோ - ஆப்டெக்ஸ் வாரியத் தலைவராக்கினார், எம்.ஜி.ஆர்.,

கடந்த ௧௯௭௨ அக்., ௧௪ல் தி.மு.க.,வில் இருந்து எம்.ஜி.ஆர்., நீக்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து, தி.மு.க., பொதுச்செயலர் நெடுஞ்செழியன் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அதை எதிர்த்து ராமலிங்கம் தலைமையில் போராட்டக் குழுவினர் சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள சத்யா திருமண மண்டபத்தில் இருந்து மயிலாப்பூர் பொ-துக்குழு நடைபெறும் இடம் வரை கண்டன கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.

அதன்பின், எம்.ஜி. ஆரின் ஒப்புதலோடு, பத்திரிகையாளர்களை அழைத்து, 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற புதிய கட்சியை அக்டோபர் 17ல் எம்.ஜி.ஆர்., ஆரம்பிக்கப் போகிறார் என்ற அறிவிப்பை வெளியிட்டார், ராமலிங்கம்.

எம்.ஜி.ஆர்., அறிவுறுத்தலின்படி அறிவிப்பை தான் ராமலிங்கம் வெளியிட்டாரே தவிர, அவர் கட்சியை ஆரம்பித்தவர் அல்ல!

அன்றைய காலகட்டத்தில், எம்.ஜி.ஆர்., சார்பில் வெளியிடும் அறிவிப்புகளை ராமலிங்கம் தான் பத்திரிகைகளுக்கு சொல்வார்.

அதை வைத்து ராமலிங்கம் தான் அ.தி.மு.க.,வை ஆரம்பித்தார் என்று இப்போது பொய் தகவல்களை பரப்புகின்றனர். அதையே சசிகலாவும் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆரின ் தொண்டன் ராமலிங்கத்தின் வரலாற்றைப் போல், புதிதாக கட்சி து-வக்கியிருக்கும் சசிகலாவின் தொண்டனுக்கு ஏதேனும் வரலாறு உள்ளதா-?

கடந்த 1980ல் அ.தி.மு.க.,வில் சேர்ந்த ஜெயலலிதாவுக்கே கட்சியின் வரலாறு தெரியாது எனும் போது, 1983ல் கே.ஏ.கிருஷ்ணசாமி என்பவர் வாயிலாக ஜெயலலிதாவுக்கு அறிமுகமான சசிகலாவுக்கு மட்டும் எப்படி தெரிந்திருக்க முடியும்?

கறையான் புற்றெடுக்க அதில் கருநாகம் குடிபுகுவது போல், எவரோ ஆரம்பித்த கட்சிக்கு எம்.ஜி.ஆர்., தலைவர் ஆகவில்லை; தன் சொந்த நிதியில், உழைப்பில் கட்சி ஆரம்பித்து, சசிகலா உள்ளிட்ட எண்ணற்றவர்களுக்கு வாழ்வு கொடுத்தவர், எம்.ஜி.ஆர்., என்பதை சசிகலா நினைவில் கொள்ள வேண்டும்!

lll

Advertisement