மக்கர் செய்த எஸ்கார்ட் ஜீப்: தள்ளி ஸ்டார்ட் செய்த போலீசார்
விழுப்புரம்: விழுப்புரத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்த போலீஸ் எஸ்கார்ட் ஜீப், ஸ்டார்ட் ஆகாததால் போலீசார் தள்ளி ஸ்டார்ட் செய்தனர்.
விழுப்புரத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் இதர தேர்தல் அலுவலர்களுடன் பாதுகாப்பு பணிக்காக காவல் துறை எஸ்கார்ட் வாகனங்கள் செல்கிறது. ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று காலை மாவட்ட தேர்தல் அலுவலர் ஷேக்அப்துல் ரஹ்மான் மற்றும் தேர்தல் அலுவலர்கள், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில், தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தனர்.
அந்நிகழ்வுக்கு காவல் துறை எஸ்கார்ட் ஜீப் வந்திருந்தது. நிகழ்ச்சி முடிந்து, தேர்தல் துறை அதிகாரிகள் அடுத்த நிகழ்வுகளுக்காக அவர்களது வாகனங்களில் சென்றனர். ஆனால், அவர்களுக்கு முன் செல்ல வேண்டிய போலீஸ் எஸ்கார்ட் ஜீப் ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் செய்தது.
எவ்வளவோ முயன்றும் முடியாததால் போலீசார் கீழே இறங்கி தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்தனர். அதற்குள் அனைத்து வாகனங்களும் அங்கிருந்து சென்றுவிட்டன. வாகனங்களில், தேர்தல் அவரசரம்னு எழுதிவிட்டு, இப்படி அவசரத்துக்கு ஸ்டார்ட் ஆகாமல் இருந்தால் எப்படி என விமர்சனம் எழுந்தது.