திம்மாவரம் அங்கன்வாடி மையத்தை முழுமையாக பயன்படுத்த கோரிக்கை

செங்கல்பட்டு:திம்மாவரத்தில், அங்கன்வாடி மையத்தின் ஒருபகுதியில் சமையல் அறையில் குழந்தைகள் படித்து வருகின்றனர். முழுமையாக கட்டடத்தை பயனுக்கு கொண்டு வர வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் ஊராட்சி, அண்ணாநகர் பகுதியில், அங்கன்வாடி மையம், தனியார் கட்டடத்தில் வாடகைக்கு இயங்கி வந்தது. இந்த மையத்திற்கு புதிய கட்டடம் கட்டத்தர வேண்டும் என, கிராம சபை கூட்டம் மற்றும் காட்டங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம், கிராம பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்பின், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், அங்கன்வாடி மையம் கட்டடம் கட்ட 16.45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கட்டடம் கட்டி இரண்டு மாதங்களுக்கு முன், முதல்வரால் திறக்கப்பட்டது.

ஆனால் புதிய கட்டடத்தின் ஒரு பகுதியில் உள்ள சமையல் அறையில், இடநெருக்கடிக்கு மத்தியில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. மையத்திற்கு தினமும் குழந்தைகள் வந்து செல்கின்றன.

எனவே அங்கான்வாடி மைய கட்டடத்தை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டுவர, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

----------------------------

Advertisement