மாட்டு வண்டி போட்டிக்கான மாடுகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும் உரிமையாளர்கள்
திருவாடானை: திருவாடானை பகுதியில் மாட்டு வண்டி பந்தயத்திற்காக மாடுகளுக்கு நீச்சல் பயிற்சியளித்து தயார்படுத்தும் பணியில் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பண்டைய காலத்தில் முன்னோர்களின் காலம் தொட்டு இன்று வரை மாறாமல் போற்றப்பட்டு வரும் ஒரு வீர விளையாட்டாக மாட்டு வண்டி பந்தயம் திகழ்கிறது. திருவாடானை பகுதியில் ஏராளமானோர் இப்பந்தயத்திற்காக மாடுகளை வளர்த்து வருகின்றனர். மாட்டு வண்டி பந்தய களத்தில் சீறி பாய்வதற்கு மாடுகளுக்கு அபாரமான மூச்சுத்திறன் தேவை. இதற்காக அதிகாலை வேளையில் மாடுகளை அருகில் உள்ள கண்மாய்களுக்கு அழைத்து செல்லும் உரிமையாளர்கள் அவற்றை ஆழமான நீரில் நீச்சலடிக்க விடுகின்றனர்.
நீரில் நீந்துவதால் மாடுகளின் உடல் வலுவடைவதுடன் நுரையீரலும் பலப்படும். இதனால் பந்தய துாரத்தை மாடுகள் சோர்வின்றி கடக்கும். வெறும் பயிற்சிக்கு மட்டுமின்றி சத்தான உணவும் அவசியம். இது குறித்து ஆட்டூர் பிரபு கூறியதாவது:
நான் கடந்த 10 ஆண்டுகளாக மாட்டு வண்டி பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறேன். என்னிடம் பெரிய மாடு, நடுமாடு என அனைத்து பிரிவுகளிலும் ஓடக்கூடிய காளைகள் உள்ளன. பந்தய காளைகளுக்கு சாதாரண வைக்கோல் மட்டும் போதாது. ராஜ உபச்சாரம் செய்ய வேண்டியுள்ளது. தினமும் காலையில் நடைபயிற்சி, கண்மாய் நீரில் நீச்சல் என கொடுத்து விட்டு பந்தய காளைக்கு தனியாக சத்தான உணவு தயார் செய்யபடுகிறது.
உடல் பலத்திற்கு பேரிச்சம் பழம், நிலக்கடலை, செரிமானத்திற்கு சுக்கு, மிளகு கலந்த நாட்டு மருந்துகள், பருத்திக்கொட்டை, தவிடு மற்றும் பச்சை புற்கள் கொடுக்கிறோம். எனது மாடுகள் வெளி மாவட்டங்களில் நடைபெறும் பந்தயங்களிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளது. இது எனக்கு பெருமையாக உள்ளது என்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
இயந்திரங்கள் நிறைந்த இந்த நவீன காலத்திலும் காளைகளின் வேகத்தை வைத்து நடத்தப்படும் இந்த பந்தயம் தமிழர்களின் பண்பாட்டோடு கலந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு இணையாக மாட்டு வண்டிப்பந்தயம் இப்பகுதியில் விமரிசையாக நடக்கிறது. இந்த பந்தயங்கள் மூலம் கிராமப்புறங்களில் பாரம்பரியம் காக்கப்படுகிறது என்றனர்.
--
மேலும்
-
தேசிய பங்கு சந்தையிலும் கச்சா எண்ணெய் வர்த்தகம் ஏப்., 13 முதல் அறிமுகம்
-
முக்கிய 7 விவசாய பொருட்களுக்கு முன்பேர வர்த்தக தடை நீட்டிப்பு உணவு பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை
-
நிறுவன அறிவிப்புகள்
-
தொகுதி பங்கீட்டில் நடந்த உள்ளடி: பா.ஜ.,வுக்குள் வெடித்தது பூகம்பம்
-
நீண்டகால வளர்ச்சிக்கு தயாராகும் 'பெல்'
-
'பி.எம்., இ டிரைவ்' திட்டத்தில் மாற்றம் வாகன பதிவுக்கான காலக்கெடு நீட்டிப்பு