திருப்புத்துாரில் 14 வது முறையாக தி.மு.க., போட்டி
திருப்புத்துார்:திருப்புத்துார் தொகுதியில் இதுவரை நடந்த இடைத் தேர்தல் உள்ளிட்ட 17 தேர்தல்களில் 9 முறை வெற்றி பெற்றுள்ள தி.மு.க., தற்போது 14வது முறையாக போட்டியிடுகிறது. தொடர்ச்சியாக 5 வது முறையாக அமைச்சர் பெரியகருப்பன் போட்டியிடுகிறார்.
திருப்புத்துார் தொகுதியில் 1952 ல் சுயேச்சையாக போட்டியிட்ட ராஜா சர் முத்தையா செட்டியார் தொகுதியில் முதல் வெற்றியை பெற்றார். 1957 ல் தமிழகத்தில் இரு தொகுதிகள் ‛திருப்புத்துார்' என்ற பெயரில் இருந்ததால், சிவகங்கை திருப்புத்துார் ‛திருக்கோஷ்டியூர்' தொகுதியாக மாற்றப்பட்டது. அப்போது கவிஞர் கண்ணதாசன் சுயேச்சையாக 1957 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு காங்.,வேட்பாளர் என்.வி.சொக்கலிங்கம் அம்பலம் என்பவரிடம் தோற்றார்.
தி.மு.க.,வின் முதல் வெற்றி
1962 ல் நடந்த தேர்தலில் தி.மு.க.,சார்பில் போட்டியிட்ட செ.மாதவன் வெற்றி பெற்று தொகுதியில் தி.மு.க.,வின் கணக்கை துவக்கினார். தொடர்ந்து 1967,1971 தேர்தல்களில் காங்.,வேட்பாளர்களை தோற்கடித்து செ.மாதவன் தொடர்ச்சியாக 3 முறை வென்று அமைச்சரானார்.
தி.மு.க.,அ.தி.மு.க.,வை வீழ்த்திய இ.கம்யூ.,
----------------------------------------------
1977 ல் அ.தி.மு.க., முதல் முறையாக பங்கேற்ற நான்கு முனைப் போட்டியில் தி.மு.க.,அ.தி.மு.க.,வேட்பாளர்களை தோற்கடித்து, காங்.,கூட்டணியில் இ.கம்யூ.,வேட்பாளர் கூத்தகுடி சண்முகம் வென்றார். 1980 ல் தி.மு.க.,கூட்டணியில் காங்.,வேட்பாளர் வால்மீகி வெற்றி பெற்றார். 1984 ல் அ.தி.மு.க.,சார்பில் போட்டியிட்ட செ.மாதவன் நான்காவது முறையாக வென்றார். தொகுதியில் அ.தி.மு.க.வின் முதல் வெற்றியை பெற்றார்.
1989 ல் தி.மு.க.சார்பில் தென்னரசு வெற்றி பெற்றார். 1991 ல் அ.தி.மு.க., சார்பில் எஸ்.கண்ணப்பன்(இப்போது ராஜகண்ணப்பன்) வெற்றி பெற்று அமைச்சரானார். 1996 ல் தி.மு.க.,சார்பில் ராம.சிவராமன் வென்றார். 2001 ல் அ.தி.மு.க.,சார்பில் கே.கே.உமாதேவன் வென்றார்.
நான்கு முறை வென்றவர்கள் -------------------------------
2006 ல் அ.தி.மு.க.,வை வீழத்தி தி.மு.க.,வேட்பாளர் கேஆர்.பெரியகருப்பன் வென்று அமைச்சரானார். பின்னர் தொடர்ந்து 2011,2016,2021 ஆகிய 3 தேர்தல்களில் அ.தி.மு.க.வை வீழ்த்தி கேஆர்.பெரியகருப்பன் வென்றார். தற்போது 5 வது முறையாக தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் அதிக முறை போட்டியிடவர் முன்னாள் அமைச்சர் மாதவன். தி.மு.க.,சார்பில் 3 முறையும், சுயே.,ஆக ஒரு முறையும், அ.தி.மு.க.,சார்பில் 1, அ.தி.மு.க.(ஜா) பிரிவில் 1 முறை என 6 தடவை போட்டியிட்டு நான்கு முறை வென்றுள்ளார். தற்போது அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் 4 முறை வென்று 5 முறையாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 1952 முதல் நடந்துள்ள 16 பொதுத்தேர்தல்கள் மற்றும் 1981 இடைத்தேர்தல் முடிவுகளில் தி.மு.க., 9 முறை வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க.,3முறையும், காங்.,2 முறையும்,இ.கம்யூ.,1 முறை, சுயே.,1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.