அ.தி.மு.க.,வுடன் நேருக்கு நேர் மோதும் தி.மு.க.,

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் தி.மு.க., போட்டியிடும், 4 சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க.,வுடன் நேரடியாக மோதுகிறது.

கடலுார் மாவட்டத்தில் திட்டக்குடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலுார், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில்(தனி) ஆகிய, 9 தொகுதிகள் உள்ளன. அதில் அ.தி.மு.க.,கூட்டணியில் அ.தி.மு.க,. 7 தொகுதிகளிலும், பா.ம.க., 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. நேற்று தி.மு.க., கூட்டணி போட்டியிடும் தொகுதி விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி திட்டக்குடி, நெய்வேலி, புவனகிரி, குறிஞ்சிப்பாடி ஆகிய, 4 தொகுதிகளில் தி.மு.க.,வும், பண்ருட்டி, காட்டுமன்னார்கோயில் தொகுதிகளில் வி.சி., கடலுாரில் காங்., விருத்தாசலத்தில் தே.மு.தி.க., சிதம்பரத்தில் மனிதநேய ஜனநயாக கட்சி உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகின்றன.

இதன் மூலம் தி.மு.க., போட்டியிடும், 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க.,வை நேரடியாக சந்திக்கிறது. கடந்த முறை திட்டக்குடி, நெய்வேலி தொகுதிகளில் தி.மு.க.,வை எதிர்த்து அ.தி.மு.க.,கூட்டணி கட்சி போட்டியிட்டதால் தோல்வியைத்தழுவியது. அதனால் இம்முறை அந்த தொகுதிகளில் தி.மு.க,.வை எதிர்த்து அ.தி.மு.க., வேட்பாளர்களே நேரடியாக களம் காண்கின்றனர். இதனால் அ.தி.மு.க., - தி.மு.க., கட்சியினர் தீவிர பிரசாரத்தை துவக்கி உள்ளதால் மாவட்டத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Advertisement