வடமாநில தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வட மாநில தொழிலாளியை தாக்கி பணத்தை பறித்துச் சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

பீகார் மாநிலம் பதேபூரா பகுதியைச் சேர்ந்தவர் முகமது அன்சார் 27. ராமநாதபுரம் குமரய்யா கோயில் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரின் கடைக்கு நேற்று முன்தினம் இரவு வந்த 3 பேர் குடி போதையில் வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூவரும் சேர்ந்து முகமது அன்சாரை தாக்கி கடையை அடித்து நொறுக்கினர்.

அவரிடம் இருந்த ரூ.12 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பினர். முகமது அன்சார் காயத்துடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கேணிக்கரை போலீசார் விசாரித்ததில்எட்டிவயல் அருகே உள்ள ஆணைகுடி பகுதியை சேர்ந்த குமரன் 48, பாண்டியூர் ராமசாமி மகன் முருகன் 36, மாதவனுார் முனியாண்டி மகன் முருகன் 33, என தெரியவந்தது. மூவரையும் கைது செய்தனர்.

Advertisement