மூலப்பொருள் விலை உயர்வால் செலவை  சமாளிக்க முடியலை!அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்கள் தவிப்பு

கோவை: கிராப்ட் பேப்பரின் விலை உயர்வு, மின்கட்டணம், ஜி.எஸ்.டி., சொத்துவரி உயர்வு ஆகியவற்றால், அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் தொழிலை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். கிரைண்டர், மோட்டார், பம்ப், வால்வ், எலெக்டிரிகல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மருந்து, உணவு, எப்.எம்.சி.ஜி., என அனைத்து விதமான உற்பத்திப் பொருட்களுக்கும் 'பேக்கேஜிங்' முக்கியம். இதற்கான அட்டைப்பெட்டிகளை தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருள் கிராப்ட் பேப்பர்.

100 - 450 ஜி.எஸ்.எம்., வரையிலான காகிதம் அட்டைப்பெட்டி தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. நிலக்கரி, கழிவுக் காகிதம், போக்குவரத்து செலவு உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் காகித ஆலைகள், கிராப்ட் பேப்பர் விலையை உயர்த்தியுள்ளன.

இதனால், அட்டைப்பெட்டி விலையை உயர்த்த வேண்டிய சூழலில், மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக, அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க (சிக்ப்மா) உப தலைவர் கதிர்வேலு கூறியதாவது:

கடந்த ஆண்டு, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் தலையிட்டது உள்ளிட்ட காரணங்களால் மூலப்பொருள் விலை உயர்ந்தது. தற்போது ஈரான் போர்ச்சூழலால் பாதிக்கப்பட்டுள்ளோம். 2025 ஜன.,யில் 120 ஜி.எஸ்.எம்., கிராப்ட் பேப்பரின் விலை கிலோவுக்கு ரூ.28 முதல் ரூ.30 வரை இருந்தது. தற்போது ரூ.35 வரை விற்பனையாகிறது. இந்த மாதத்தில் மட்டும் கிலோவுக்கு ரூ.4 அதிகரித்துள்ளது. மின்கட்டண உயர்வும் பாடாய்படுத்துகிறது. முன்பு, 100 டன் அட்டைப்பெட்டியைக் கையாண்டபோது ரூ.30 ஆயிரம் மின் கட்டணம் செலுத்தினோம். தற்போது 15 டன் கையாண்டாலே ரூ.35 ஆயிரம் மின் கட்டணம் வருகிறது.

மூலப்பொருளுக்கான ஜி.எஸ்.டி., 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், அட்டைப்பெட்டி மீதான ஜி.எஸ்.டி., 5 சதவீதம். இதனால், எங்களுக்கு 13 சதவீதம் இடிக்கிறது.

சொத்துவரியும் அதிகம். ரூ.24 ஆயிரம் கட்டிய இடத்தில் ரூ.52 ஆயிரம் கட்டுகிறோம். குப்பையை அள்ள ஆளே வருவதில்லை. ஆனால், ரூ.3,000 குப்பை வரி செலுத்தினால்தான் சொத்துவரியே செலுத்த முடியும்.

இப்படி அனைத்து விதங்களிலும், எங்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அட்டைப்பெட்டி விலையை உயர்த்தினாலும், கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் ஏற்க மறுக்கின்றன. பல நிறுவனங்கள் நிலுவை வைத்துள்ளன. எம்.எஸ்.எம்.இ., ல் புகார் தெரிவித்தாலும், வாய்தாவுக்கே வருவதில்லை.

எனவே, இச்சூழல் குறித்து விவாதிக்க, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் உள்ள 600க்கும் மேற்பட்ட அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்களின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளோம். அதில் விவாதித்து முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement