சிக்னலில் பசுமை பந்தல் அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் இரட்டை மண்டபம் சிக்னலில் பசுமை நிழற்பந்தல் அமைக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் அனைத்து சாலை சந்திப்புகளில் உள்ள சிக்னல்களைவிட, இரட்டை மண்டபம் சிக்னலில் மட்டுமே வாகன ஓட்டிகள் 120 நொடிகள் நிற்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகளின் நலன் கருதி, 2024ல், காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் நிர்வாகம் மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில், கோடை வெயில் துவக்கத்திலேயே, இரட்டை மண்டபம் சிக்னலில் பசுமை நிழற்பந்தல் அமைக்கப்பட்டது.
இதனால், கொளுத்தும் வெயிலிலும் சிக்னலில் காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பசுமை நிழற்பந்தல் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலில் நடமாடுவோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, நடப்பு ஆண்டு இரட்டை மண்டபம் சிக்னலில் பசுமை நிழற்பந்தல் அமைக்க, காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.