நெல் பயிர் நிலத்தில் சாய்ந்ததால் மாம்பாக்கத்தில் மகசூல் பாதிப்பு
உத்திரமேரூர்:எம்.மாம்பாக்கம், திருவானைக்கோவில் சுற்றுவட்டாரத்தில் அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள், சில தினங்களுக்கு முன் பெய்த காற்று மழையால் நிலத்தில் சாய்ந்துள்ளதால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்தில் நடப்பாண்டு நவரை பருவத்திற்கு 28,000 ஏக்கர் நிலப் பரப்பில் நெல் சாகுபடி செய்துள்ளனர். இதில், கடந்த ஜனவரி மாதம் நடவு செய்த பயிர்கள் தற்போது கதிர் வந்த நிலையிலும் சில இடங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன், காற்றுடன் பெய்த மழை காரணமாக எம்.மாம்பாக்கம், திருவானைக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல்பயிர்கள் நிலத்தில் சாய்ந்து உள்ளன.
நிலத்தில் சாய்ந்த அப்பயிர்களின் நெல் மணிகள் உதிர்ந்ததால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
எனவே, இப்பகுதிகளில் நெல் பயிர்கள் பாதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அதற்கான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.