பெதப்பம்பட்டி அரசு பள்ளியில் ஹாக்கி பயிற்சி மையம் தேவை

உடுமலை: பெதப்பம்பட்டி அரசுப்பள்ளி மைதானத்தை மேம்படுத்தி, ஹாக்கி பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என, விளையாட்டு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குடிமங்கலம் ஒன்றியம், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு சொந்தமான மைதானம், ஒன்றிய அலுவலகத்தின் எதிரில் அமைந்துள்ளது.

தற்போது இம்மைதானத்தை நடைபயிற்சி செல்வோர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் போதிய பராமரிப்பு இல்லாததால், மழைக்காலத்துக்கு பிறகு, மைதானம் புதர் மண்டி விடுகிறது.

தொடர் பயன்பாடு இல்லாததால், மைதான பராமரிப்பு சவாலாகி விடுகிறது. இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள், ஹாக்கி விளையாட்டில் தனித்துவம் பெற்றுள்ளனர். பள்ளி மற்றும் கல்லுாரி அணிகளில், மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று வருகின்றனர்.

எனவே, தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக மைதானத்தில், ஹாக்கி பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என, விளையாட்டு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். அவ்வாறு அமைந்தால், மாணவர்களும் பயன்பெறுவார்கள். மைதானமும் மேம்படுத்தப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement