தானே மாநகராட்சியில் ரூ.4,500 கோடி மோசடி: கவுன்சிலர்கள் கொந்தளிப்பு
தானே: மஹாராஷ்டிராவில் உள்ள தானே மாநகராட்சியின் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ., மற்றும் தேசியவாத காங்., - சரத் சந்திர பவார் கட்சி கவுன்சிலர்கள், வளர்ச்சி நிதியில் நடந்த முறைகேடுகள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிடும்படி வலியுறுத்தினர்.
எதிர்ப்பு மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள தானே மாநகராட்சி, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கட்டுப்பாட்டில் உள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த ஷர்மிளா பிம்பிளோல்கர், மேயராக உள்ளார்.
தானே மாநகராட்சி நிர்வாகம், 2026 - 27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சமீபத்தில் தாக்கல் செய்தது.
இதற்கு பா.ஜ., மற்றும் தேசியவாத காங்., சரத் சந்திர பவார் கட்சி கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பா.ஜ., கவுன்சிலர் மிருணாள் பெண்ட்சே கூறியதாவது:
கடந்த நான்கு ஆண்டுகளில், மாநில அரசிடமிருந்து வளர்ச்சி நிதியாக பெறப்பட்ட, 4,953 கோடி ரூபாயில், 2,560 கோடி ரூபாய் பாதாள சாக்கடை மற்றும் நடைபாதை பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், களத்தில் இந்த அளவிற்கு பணிகள் நடந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. இவ்வளவு பெரிய தொகை எங்கே போனது?
என்ன பயன்? மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை தகுதியற்ற பயனாளிகளுக்கு ஒதுக்கியதில், 2,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.
இது குறித்து விசாரித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இல்லாவிட்டால், மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
அடிப்படை தேவையான குடி நீருக்கே மக்கள் இன்னும் டேங்கர் லாரிகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. அப்படி இருக்கையில், இவ்வளவு செலவு செய்து என்ன பயன்?
இவ்வாறு அவர் கூறினார்.
தேசியவாத காங்., சரத் சந்திர பவார் கட்சி கவுன்சிலர் சுதீர் பகத் கூறுகையில், ''மும்ப்ரா மற்றும் திவா போன்ற பின்தங்கிய பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, தானே மாநகராட்சி தவறிவிட்டது.
''இந்த பட்ஜெட் சாதாரண குடிமக்களை விட செல்வந்தர்களுக்கான வசதிகளுக்கே முன்னுரிமை அளிக்கிறது,'' என்றார்.