விபத்தில் ஒரு காலை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத முதியவர்
விபத்தில் ஒரு காலை இழந்த போதும், தன்னம்பிக்கையை இழக்காத முதியவர் ஒருவர், தினமும், 30 முதல், 40 கிலோ பழங்களை, சைக்கிளில் ஏற்றிச்சென்று விற்பனை செய்து வருகிறார்.
பெலகாவி மாவட்டம் பைலஹொங்கல் தாலுகா நெகினஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நபிசாப் அல்லாபக் ஷா துண்டமணி, 62. பல ஆண்டுகளுக்கு முன்னரே இவரின் மனைவி இறந்து விட்டார். ஆயிஷா, சாய்ரா, நஸ் ரீன் என மூன்று மகள்களுக்கும் திருமணம் செய்து விட்டார்.
வாழைப்பழம் விற்பனை செய்து வந்தார். ஏழு ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் வலது காலை இழந்தார். மனைவியும் இல்லாததால், தனக்கு உதவ யாரும் இல்லாத நேரத்தில், மூத்த மகள் ஆயிஷா வீட்டில் தங்கினார். பல மாதங்கள் ஒரே இடத்தில் எந்த பணியும் செய்யாமல், மருமகனுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை.
அதனால், பழங்கள் விற்கிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு மகளும், மருமகனும், 'அதெல்லாம் வேண்டாம். வீட்டிலேயே அமர்ந்திருங்கள்' என்று கூறியுள்ளார். இப்படியே பல மாதங்கள் சென்றால், மன அழுத்தத்துக்கு ஆளாகினார். இதை பார்த்த மகளும், மருமகனும், 'உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்' என்று கூறிவிட்டனர்.
சந்தோஷம் அடைந்த நபிசாப், பழங்களை விற்க தயாரானார். ஒரு காலில் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டார். பின், தினமும் மகள் வீட்டில் இருந்து, காலை 5:00 மணிக்கு புறப்பட்டு எம்.கே.ஹூப்பள்ளி டவுனுக்கு சைக்கிளில் செல்வார். அங்கு இவரின் மாமனார் முகுடாசாப், பழங்கள் வாங்கி தருவார்.
அதன்பின் பெண்டிகேரி, முட்னால், கூகடோலி, சிக்கஹட்டிஹள்ளி உட்பட பல கிராமங்களுக்கு சென்று பழங்களை விற்று விட்டு, பகல், 11:00 மணிக்கு வீட்டுக்கு செல்வார். தினமும், 30 முதல் 40 கிலோ பழங்களை விற்று விடுவார்.
* மன நிம்மதி
இதுகுறித்து நபிசாப் கூறியதாவது:
நான்கு ஆண்டுகளாக சைக்கிளில் வாழைப்பழம் விற்று வருகிறேன். என் மகளும், மருமகனும் வீட்டிலேயே இருங்கள் என்று கூறினர். விபத்தில் காலை இழந்த போதும், வீட்டில் அமர்ந்து கொண்டு உணவு சாப்பிட எனக்கு விருப்பம் இல்லை. 'உழைத்து வாழ வேண்டும்; வேலை தான் கடவுள்' என்ற கொள்கையுடன் வாழ்பவன் நான்.
தினமும் பழங்களை விற்பனை செய்வது எனக்கு மன நிம்மதி அளிக்கிறது. சைக்கிளில் மிதித்து செல்லும் போது எந்த வலியும் தெரிவதில்லை. யாருடைய உதவியும் இதுவரை நாடியதில்லை. நாம் வேலை செய்தால், யாருக்கும் பயப்பட தேவையில்லை. வேலை செய்யவில்லை என்றால் நம் வாழ்க்கை நாசமாகி விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
* முன்உதாரணம்
மூத்த மகள் ஆயிஷா கூறுகையில், ''என் தாயார் இறந்த பின், என்னையும், என் இரு சகோதரிகளையும் என் தந்தை வளர்த்தார். விபத்துக்கு பின், என் தந்தை எங்களுடன் வசித்த வருகிறார். கிராமத்தினரும், உறவினர்களும், 'உன் தந்தைக்கு சாப்பாடு போகமாட்டாயா' என்று என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், என் தந்தைக்கு வாழைப்பழம் விற்பனை செய்வதி நிம்மதி கிடைக்கிறது,'' என்றார்.
நபிசாப் மாமனார் முகுடாசாப் பாகேவாடி கூறுகையில், ''நானும், என் பேத்தியும் கூறினாலும் மருமகன் கேட்பதில்லை. ஒரு கால் இல்லை என்றாலும் உழைத்து வாழ வேண்டும் என்று, மற்றவர்களுக்கு முன்உதாரணமாக இருக்கிறார். இது, எனக்கு பெருமையாக உள்ளது,'' என்றார்.
- நமது நிருபர் -