திடீர் திடீரென மாறும் வேட்பாளர்கள்: "திக் திக்" திகிலில் கட்சி தொண்டர்கள்!

- நமது நிருபர்


வேறு எந்த தமிழக தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் பல புதுமைகள் நடந்து வருகின்றன. இந்த புதுமைகளில் கடைசியாக இடம் பெற்றுள்ளது திடீர் திடீரென வேட்பாளர்கள் மாற்றம்.

எப்போதுமே கட்சி தலைமை ஒருவரை வேட்பாளராக அறிவித்து விட்டால், "மானமிகு" தொண்டர்கள், "கட்சி கிழித்த கோட்டை தாண்டாமல்'' வேட்பாளரின் வெற்றிக்காக பாடுபடுவார்கள். ஒரு முறை அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல் மாற்றப்பட்டதாக தகவலை கேள்விப்படவே முடியாது. இதற்கு காரணம் அப்போது இருந்து ஆளுமை மிக்க தலைவர்கள் தான்.

ஆனால் இம்முறை கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்களே ஆட்டம் காண்கிறது. ராணிப்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் அமைச்சர் காந்தியின் மகன் வினோத். காந்திக்கு இந்த முறை சீட் வழங்கப்படாமல், அவரது மகனுக்கு வழங்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று திடீரென வினோத், தனக்கு வழங்கப்பட்ட 'சீட்'டை தனது தந்தைக்கு விட்டுக்கொடுப்பதாக அறிவித்துள்ளார். தந்தை போட்டியிட விருப்பம் தெரிவித்ததால், அவருக்கு வாய்ப்பளிப்பதாக அறிவித்துள்ளார். கட்சி தலைமையே அறிவித்த ஒரு வேட்பாளர், வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் இப்படியொரு திடீர் முடிவெடுத்தது, கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதியின் த.வெ.க., வேட்பாளர் என, மஞ்சுநாத் என்பவரை கட்சித் தலைவரான நடிகர் விஜய் அறிவித்தார். ஆனால், அவர் போட்டியிடாமல் விலகியதால், மஞ்சுநாத்துக்கு பதிலாக அம்பரீஷ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கடைசி நேரத்தில், அவருக்கு என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. த.வெ.க.,வின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலர் வேந்தர்க்கரசன் என்ற வடிவேல் ‛‛நான் தான் வேட்பாளர்'' என்று கூறி வேட்புமனு தாக்கல் செய்தார். இப்படி ஒரு வாரத்தில் ஒரே தொகுதியில் 3 முறை வேட்பாளர்கள் மாற்றப்பட்ட வினோதம் நடந்துள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், பலகட்ட குழப்பங்களுக்கிடையே சில நாட்களுக்கு முன்னதாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதிலும் அவர்களுக்கு ஒதுக்கிய 28 தொகுதிகளில் 27க்கு தான் முதல்கட்டமாக வேட்பாளர்களை அறிவித்தனர். மீதம் இருந்தது மேலூர் தொகுதி மட்டுமே. 'நீ....ண்ட' யோசனைக்கு பிறகு காங்., முன்னாள் எம்.பி., விஸ்வநாதனுக்கு வாய்ப்பு வழங்கினர். இந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளை விஸ்வநாதன் சந்தித்தபோது, நிர்வாகிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுபோக, புதுச்சேரியில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை வேட்புமனு தாக்கல் முடிந்தும் இழுபறி ஆனதால், திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் அங்குள்ள 30 தொகுதிகளிலும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அதே கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியும், திமுக - காங்., தொகுதி பங்கீட்டு சண்டைக்கு இடையே 'தன் பங்கிற்கு' 4 தொகுதிகளில் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தது.

பின்னர் வேட்புமனு தாக்கல் முடிந்து கூட்டணியில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதால், தற்போது உழவர்களை தொகுதியில் மட்டும் கூட்டணி சார்பில் போட்டியிடுவதாகவும், மீதமுள்ள 3 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களுக்கு ஓட்டு போடவேண்டாம் என அக்கட்சி தலைவரே அறிவித்தது, குழப்பத்தை ஏற்படுத்தியது. தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க மாட்டோம், கூட்டணி கட்சிக்கே ஓட்டு சேகரிப்போம், எங்கள் வேட்பாளருக்கு ஓட்டளிக்காதீர்கள் என சொன்னதால், அவரை நம்பி அவரது கட்சி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் நிலையையும் யோசிக்கவில்லை, தன் கட்சியை விட, கூட்டணி கட்சியே மேலானது போல் திருமாவளவன் கருதுவதாகவும் அக்கட்சியினர் புலம்பி வருகின்றனர்.

அதேபோல், தமிழகத்தில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் தான் போட்டியிடுவதாக அறிவித்தார் திருமாவளவன். எம்.பி., பதவியில் இருக்கும்போதே, எம்எல்ஏ.,வாக போட்டியிடுவதாக தன்னை அறிவித்தது புரியாத புதிராக பார்க்கப்பட்டது.

சில நாட்களில், தனது முடிவை மாற்றி, அந்தத் தொகுதியில் தான் போட்டியிடவில்லை என்றும், மறைந்த தலைவர் இளையபெருமாளின் மகன் ஜோதிமணி விசிக வேட்பாளராகப் போட்டியிடுவார் என்றும் திருமாவளவன் அறிவித்தார். இவரது கட்சி காங்கிரசாம். இப்படி திடீர் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி வரும் திருமாவளவன், 'யுத்தக்களத்தில் பின்வாங்குவதும் ராஜதந்திரம் தான்' என பஞ்ச் டயலாக் பேசி சமாளித்தார்.

இப்படி ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் தேர்வில் ‛‛பம்முவது'' பாய்வதற்கா இல்லை பதுங்கி ஓடுவதற்கா என்பது தேர்தல் முடிந்தால் தெரிந்துவிடும்.

Advertisement