பாகிஸ்தான் ஆப்கன் எல்லையில் மோதல்: 6 ராணுவ வீரர்கள் பலி

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் எல்லையில் ஏற்பட்ட மோதலில், பாகிஸ்தானின் ராணுவ வீரர்கள் 6 பேர் பலியாகி உள்ளனர்.

நம் அண்டை நாடான பாகிஸ்தான், அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் இடையே பிரபலமான 'துரந்த் லைன்' எனப்படும் சர்வதேச எல்லைப்பகுதி உள்ளது. ஆப்கானிஸ்தான் இந்த எல்லையை அங்கீகரிக்க மறுப்பதால், இரு தரப்பிலும் அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்தப்பகுதியில், பாகிஸ்தான் படைகள் பீரங்கித் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அமைப்பினர் பதிலடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த மோதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 6 பேர் உயிரிழந்ததுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் தலிபான் பயங்கரவாதிகள் ஒரு பாகிஸ்தான் ராணுவ முகாமையை கைப்பற்றியதாகவும், ஒரு வீரரின் உடலை கைப்பற்றியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால், பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

Advertisement