நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்!
வாழ்க்கையில் மிகவும் சிரமப்பட்டு முன்னேறி, இன்று தொலைகாட்சியில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் மீரா:
எளிய கிராமத்து பின்னணியில், சாதாரண குடும்பத்தில் பிறந்தவள் நான். என் தந்தைக்கு நிரந்தர வேலை இல்லை. தடுமாற்ற சூழலில் தான் பள்ளிப் படிப்பை முடித்தேன்.
பி.ஏ., ஆங்கிலம் படித்து, என் பேராசிரியரின் வழிகாட்டுதலில், பி.எட்., முடித்தேன். மாதம், 7,000 ரூபாய் சம்பளத்தில், தனியார் பள்ளி ஆசிரியையாக பணியை துவக்கினேன்.
அப்படியே அஞ்சல் வழி கல்வியில், எம்.ஏ., ஆங்கிலம் முடித்து, தகுதியை வளர்த்துக் கொண்டேன். வாழ்க்கையில் முன்னேற துவங்கிய போது, கொரோனா ஊரடங்கு வந்தது.
பள்ளிகள் மூடப்பட்டதால், வேலை இழந்தேன்; அப்பாவின் தொழிலிலும் பெரும் நஷ்டம் உண்டானது. குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில், ஈரோட்டில் உள்ளூர் தொலைக்காட்சி சேனலில், நிகழ்ச்சி தொகுப் பாளர் பணியில் சேர்ந்தேன்.
ஆரம்பத்தில் எனக்கு எப்படி ஒப்பனை செய்து கொள்ள வேண்டும்; எப்படி உடைகள் அணிய வேண்டும் என்று கூட தெரியாது. முதல் முறை மைக் பிடித்து பேசியபோது கை, கால்கள் நடுங்கின. ஒளிப்பதிவாளர் தான் என்னை தைரியப்படுத்தினார்.
'பரவாயில்லை, கற்றுக் கொள்ளலாம். இதுதான் நம் வேலை' என்று தைரியமாக முடிவெடுத்து, என்னை நானே படிப்படியாக மாற்றிக் கொண்டேன். முதலில் பலரும் கிண்டல் செய்தனர். அந்த அவமானங்களே என்னை வளர்த்தன.
ஆரம்பத்தில் ஒரு நிகழ்ச்சி க்கு, 500 அல்லது 800 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கினேன். சில நேரங்களில் பஸ் கட்டணம் மட்டுமே கிடைக்கும். ஆனால், இன்று ஒரு நிகழ்ச்சிக்கு, 3 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வாங்குகிறே ன்.
எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு, 'டிவி' சினிமா தொடர்பான வேலைகள் மீது, நல்ல அபிப்ராயம் இல்லை.
இருந்தாலும் எனக்கு சாதிக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக இருந்தது. ஒரு தீபாவளி நிகழ்ச்சி தொகுப்புக்கான வாய்ப்பு வந்தது; ஆனால், வீட்டில் ஏற்கவில்லை.
வாய்ப்புகள் எப்போதாவது வரும்; பயன்படுத்திக் கொள்ளா விட்டால், நம்மை போல் முட்டாள் யாரும் இல்லை என்று உணர்ந்து, துணிச்சலாக வீட்டை விட்டு சென்றேன்.
அப்பா ஒரு விபத்தில் உயிரிழந்து விட்டார். இப்போது, என் முன்னேற்றத்தை கண்டிருந்தால் நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பார்.
அப்பா இல்லாததால், என் அம்மா மற்றும் குடும்பத்தை பராமரிக்கும் முழு பொறுப்பும் எனக்கு உள்ளது.
தொழிலில் அதிகம் கவனம் செலுத்த துவங்கி உள்ளேன். எனக்கு நானே ஊக்கம் கொடுத்துக் கொண்டு, எனக்கு நானே நன்றி சொல்லி, என் பயணத்தை தொடர்கிறேன்.