வில்லியனுார் தொகுதியில் ரூ.424 கோடியில் வளர்ச்சி பணி சாதனை பட்டியலை வெளியிட்டு தி.மு.க., வேட்பாளர் சிவா பேட்டி 

புதுச்சேரி: வில்லியனுார் தொகுதியில் ரூ. 424 கோடியில் வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளேன் என தி.மு.க.,.வேட்பாளர் தனது சாதனைகளை பட்டியலிட்டார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது;

கடந்த ஐந்தாண்டுகளில் மாநிலத்தில் எந்த தொகுதியிலும் செய்ய முடியாத சாதனையாக ரூ. 424 கோடி அளிவிலான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், வில்லியனுார் தொகுதி மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பரசுராமபுரத்தில் ரூ. 60 கோடி செலவில் இரட்டை அடுக்கு மேல்நிலை நீர்தேகக்கத் தொட்டி அமைத்துள்ளேன். சுல்தான்பேட்டையில், ரூ.18 கோடி செலவில் ஏ.எப்.டி., குடிநீர் திட்டம். உத்திரவாகினிப்பேட் பகுதியில் ரூ. 22 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தி உள்ளேன்.

ஏழைமக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 8 கோடி செலவில் கஸ்தாரிபாய் திருமண மண்டபம், வில்லியனுாரையொட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஊள்ளூர் சாலைகளில் ரூ. 40 கோடியில் நடைபாதையுடன் கூடிய வாய்க்கால் மேம்பாட்டுப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வில்லியனுார் பகுதியில் உள்ள கோவில்கள் அனைத்திற்கும் குடமுழக்கு செய்யப்பட்டுள்ளது. புகழ்பெற்ற திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சோழர் காலத்தில் செய்யப்பட்ட தேர் பழுதடைந்த காரணத்தால் அதன் தொன்மை மாறாமல் ரூ. 4 கோடி செலவில் புதிய தேர் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

திருக்காமீஸ்வரர் கோவிலில் தினமும் 300 பேருக்கு அன்னதானம் வழங்க திட்டம் செயல்படுத்தப்பட்டது. காசிக்கு நிகராக வீசம் தரும் ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு ரூ. 12 கோடி சுற்றுலா வளர்ச்சி நிதியில் சாலை, மின்விளக்கு உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் ஏற்படுத்தப்பட்டது. ரூ. 18 கோடியில் கருப்பட்டி வாய்க்கால் மேம்பாடு, ரூ. 5 கோடி செலவில் தொகுதி முழுவதும், ஹைமாஸ் விளக்குகள், எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மதசார்பற்ற கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்னர். எனக்கு மீண்டும் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டளித்து வெற்றிப்பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement