31 கோடி பாட்டில் மதுபானங்களை மார்ச்சில் காலி செய்த மது பிரியர்கள்

சென்னை : 'டாஸ்மாக்' கடைகளில் கடந்த மார்ச்சில் மட்டும், 4.44 கோடி பாட்டில் பீர் மற்றும் 26.40 கோடி பாட்டில் மது வகைகள் விற்பனையாகி உள்ளன.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,787 சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. இந்த கடைகளில் கடந்த மார்ச்சில், 37 லட்சம் பெட்டி பீர் வகைகளும், 55 லட்சம் பெட்டி மது வகைகளும் விற்பனையாகி உள்ளன. அவற்றின் விற்பனை முறையே, 2025 மார்ச்சில், 32 லட்சம் பெட்டிகள் மற்றும் 53.50 லட்சம் பெட்டிகளாக இருந்தன.

ஒரு பீர் பெட்டியில், 12 பாட்டில்களும், ஒரு மதுபான பெட்டியில், 48 'குவார்ட்டர்' பாட்டில்களும் இருக்கும். இதையடுத்து, இந்தாண்டு மார்ச்சில், 4.44 கோடி பாட்டில் பீர் மற்றும், 26.40 கோடி பாட்டில் மது வகைகளை மது பிரியர்கள் குடித்து, காலியாக்கி உள்ளனர்.

இந்தாண்டு பிப்ரவரியில் பீர் விற்பனை, 27.80 லட்சம் பெட்டிகளாகவும், மது வகைகள் விற்பனை, 52.50 லட்சம் பெட்டிகளாகவும் இருந்தன.

இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வழக்கமாக மார்ச் முதல் ஆக., வரை பீர் விற்பனை அதிகம் இருக்கும். கடந்த மாதத்தில் வெயில் கடுமையாக இருந்ததுடன், அம்மாதம், 15ம் தேதி சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பும் வெளியானது.

இதனால், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், தங்களின் தொண்டர்களுக்கு மது வகைகளை வாங்கி தருகின்றனர். இதுபோன்ற காரணங்களால், கடந்த மாதத்தில் பீர் மற்றும் மது வகைகள் விற்பனை அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement