காட்சிப்பொருளாக வணிக வளாகங்கள் :மகளிர் குழுக்கள் வேதனை

உடுமலை: மகளிர் சுய உதவிக்குழுவினர் பயன்பாட்டுக்காக கிராமங்களில் கட்டப்பட்ட வணிக வளாகங்கள் காட்சிப்பொருளாக மாறியுள்ளதால், கிராம பெண்கள் வேதனையில் உள்ளனர்.

உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில், 700க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் முன்பு செயல்பாட்டில் இருந்தன.

இக்குழுவினர் தொழில் துவங்கவும், அப்பொருட்களை சந்தைப்படுத்தவும், கிராமங்களில் வணிக வளாகங்கள் அரசால் கட்டித்தரப்பட்டது.

ஆனால், பெரும்பாலான வணிக வளாகங்கள், கடைகள், முறையாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கட்டுப்பாட்டில் இல்லை; அரசியல் தலையீடு காரணமாக, விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்தது.

இவ்வாறு, படிப்படியாக கிராமங்களில் இருந்த வணிக வளாகங்களை யாரும் பயன்படுத்தாமல் காட்சிப்பொருளாக மாறத்துவங்கியது. போதிய பராமரிப்பு இல்லாமல், கடைகளும் சிதிலமடைந்தது.

தற்போது பெரும்பாலான மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடு, கேள்விக்குறியாக மாறி வருகிறது.

கிராமப்புற பெண்கள் கூறியதாவது: கிராமங்களில் நிரந்தர வருவாய் கிடைக்கும் தொழில்களை தேர்வு செய்யாததால், பல குழுக்கள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதே போல் வணிக வளாக கடைகளை ஒதுக்கீடு செய்வதிலும், பல்வேறு குளறுபடிகள் நிலவியது.

தற்போது கிராமங்களில் பயன்பாடு இல்லாமல், வணிக வளாக கடைகளை புதுப்பிக்க வேண்டும்; கூடுதலாக கடைகள் கட்டி தந்தால், பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement