மோசடி கணக்குகள் விசாரணை ஆர்.பி.ஐ.,க்கு வங்கிகள் கோரிக்கை

புதுடில்லி: கண்காணிக்கப்பட வேண்டிய வாடிக்கையாளர் கணக்குகளை ஆய்வு செய்து விசாரிக்க தங்களுக்குத் தனி அதிகாரம் தேவை என்று வங்கித்துறையினர், ரிசர்வ் வங்கியிடம் வலியுறுத்த உள்ளனர்.

இதுகுறித்து அத்துறையினர் கூறியதாவது:

மோசடி நடப்பதாக சந்தேகிக்கப்படும் வங்கி கணக்குகளை ஆர்.எப். ஏ எனும் கண்காணிப்பு பட்டியலின்கீழ் வகைப்படுத்தி வைப்பது வழக்கம். மேலும், அக்கணக்குகள் குறித்த தகவலை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள சி.ஆர்.ஐ.எல்.சி., எனும் பெரிய கடன்களுக்கான மத்திய தகவல் தொகுப்புக்கு ஒரு வாரத்துக்குள் அளித்துவிட வேண்டும்.

மேலும், காவல் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் ஏதேனும் கணக்கின் மீது விசாரணையை துவங்கினால், உடனடியாக அக்கணக்கை ஆர்.எப்.ஏ., கணக்காக வகைப்படுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட கணக்குகள் மீதான முடிவை 180 நாட்களுக்குள் எடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி விதி கூறுகிறது.

விசாரணை அமைப்புகள், அந்த காலகட்டத்துக் குள் விசாரணையை முடிக்க முடியாமல் போனால், வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தும்போதே அதற்கு இணையான ஆய்வு மற்றும் விசாரணை செய்யும் அதிகாரம் வங்கி களுக்கு தேவை. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தும்போதே அதற்கு இணையான ஆய்வு மற்றும் விசாரணை செய்யும் அதிகாரம் வங்கிகளுக்கு தேவை.

Advertisement