எந்தெந்த தடங்களில் மினி பஸ்கள் தேவை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு

சென்னை: சென்னையில் எந்தெந்த தடங்களில் மினி பஸ்கள் தேவை என்பது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் வகையில், மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், தற்போது 146 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 20 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பயணியரின் தேவையை கருத்தில் வைத்து, மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 220 மினி பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டது. இதற்கான டெண்டர் வெளியிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எந்தெந்த வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்குவது என்பது குறித்து, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

மெட்ரோ ரயில் சேவையின் பயன்களை சமீபகாலமாக பயணியர் அதிகளவில் உணரத் துவங்கி விட்டனர். இதனால், தினசரி பயணியரின் எண்ணிக்கையும், சராசரியாக நான்கு லட்சத்தை கடந்துள்ளது. பயணியரின் வருகை அதிகரிக்க இணைப்பு வாகன வசதி என்பது முக்கியமானதாக இருக்கிறது. எனவே, மாநகர போக்குவரத்து கழகத்துடன் இணைந்து 220 'ஏசி' மினி பஸ்களை இயக்க உள்ளோம். பயணியரின் தேவை எங்கெல்லாம் இருக்கிறது என்பதை செயலி வாயிலாக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். பயணியர் அதிகமாக வரும் வழித்தடங்களில் முன்னுரிமை அளித்து, முதல்கட்டமாக 'ஏசி' மினி பஸ்களின் இணைப்பு சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement