காசோலைகள் பணமின்றி திரும்பினால் இயக்குநர்களை தண்டிக்க முடியாது 'செக் பவுன்ஸ்' வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

புதுடில்லி: நிறுவனத்தின் 'செக் பவுன்ஸ்' அதாவது காசோலைகள் பணமின்றி திரும்பும் வழக்குகளில், இயக்குநர் குழு தீர்மானத்தில் கையெழுத்திட்ட ஒரே காரணத்திற்காக சம்பந்தப் பட்ட இயக்குநர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

'ப்ராஜ்டெக் இன்ஜினியரிங்' என்ற நிறுவனத்தின் ஒரு இயக்குநர் மீது காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. அவர் அன்றாட பணிகளை கவனிப்பவர் அல்ல என்றபோதிலும், இயக்குநர் குழு தீர்மானங்களில் கையெழுத்திட்டிருப்பதை சுட்டிக்காட்டி, வழக்கை ரத்து செய்ய டில்லி உயர் நீதிமன்றமும், கீழ் நீதிமன்றமும் மறுத்துவிட்டன. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, அவர் மீதான வழக்கை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், 'இயக்குநர் குழு தீர்மானம் என்பது சொத்துக்கள் வாங்குவது, உயர் அதிகாரிகளை பணியமர்த்துவது போன்ற முக்கிய கொள்கை முடிவுகளுக்கான ஆவணமே தவிர, அன்றாட பண பரிவர்த்தனைக்கானது அல்ல.

'அன்றாட வணிக ரீதியான பணிகளில் நேரடி ஈடுபாடு இருப்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே, ஒரு இயக்குநர் மீது காசோலை மோசடி சட் டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

'தீர்மானத்தில் கையெழுத்திட்டதை மட்டுமே ஆதாரமாக கொண்டு, ஒருவரை தண்டிப்பது ஏற்புடையதல்ல' என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

Advertisement