மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன்; பா.ம.க., வேட்பாளர் உத்தரவாதம்

விருத்தாசலம்;விருத்தாசலம் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், பா.ம.க., வேட்பாளர் தமிழரசி போட்டியிடுகிறார்.

அவர் கடந்த ஒரு வாரமாக விருத்தாசலத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள், தொழிலதிபர்கள், டாக்டர்கள், மங்கலம்பேட்டையில் உள்ள அனைத்து சமுதாய கூட்டமைப்பினர் மற்றும் விருத்தாசலம் நகராட்சியில் உள்ள பொதுமக்களை சந்தித்து ஓட்டு சேகரித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று, சாத்தியம், சித்துார், தருசு, மேமாத்துார், வண்ணாத்துார், இலங்கியனுார் ஐவதுகுடி, மாளிகைமேடு உள்ளிட்ட பல்வேறு 20க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு சென்றார்.

அப்போது, அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அப்போது, விருத்தாசலம் தொகுதியில், கிராம ஊராட்சிகளில் உள்ள சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை சரிசெய்து, கிராம மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன் என்று பொதுமக்களிடம் உறுதியளித்து, ஓட்டு சேகரித்தார்.

அதன்பின், மங்கலம்பேட்டையில் உள்ள மசூதிகளில் நேற்று பகல் 1:30 மணியளவில் சிறப்பு தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் ஓட்டு சேகரித்தார்.

அப்போது, அ.தி.மு.க., மாவட்ட துணை செயலர் ரவிச்சந்திரன், நல்லுார் ஒன்றிய செயலர் பச்சமுத்து மற்றும் பா.ம.க., - அ.தி.மு.க., - தே.ஜ., கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Advertisement