வைபவ் விளாசல்... ராஜஸ்தான் அசத்தல் * வீழ்ந்தது பெங்களூரு அணி
கவுகாத்தி: பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வைபவ், 26 பந்தில் 78 ரன் விளாசினார்.
இந்தியாவில் கிரிக்கெட் லீக் தொடரின் 19 வது சீசன் நடக்கிறது. நேற்று கவுகாத்தியில் நடந்த போட்டியில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோதின. மழை காரணமாக ஒரு மணி நேரம், 10 நிமிடம் தாமதமாக போட்டி துவங்கியது. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக், பீல்டிங் தேர்வு செய்தார்.
கோலி 'ஷாக்'
பெங்களூரு அணிக்கு 'சீனியர்' கோலி, பில் சால்ட் ஜோடி துவக்கம் தந்தது. ஆர்ச்சர் வீசிய போட்டியின் முதல் பந்தில், சால்ட் 'டக்' அவுட்டானார். நந்ரே பர்கர் வீசிய 2வது ஓவரில், படிக்கல், கோலி தலா ஒரு பவுண்டரி அடித்தனர். உதிரிகள் 9 உட்பட மொத்தம் 19 ரன் கிடைத்தன.
மீண்டும் அசத்திய ஆர்ச்சர் பந்தில் தேவ்தத் (14), ஹெட்மயரிடம் 'பிடி' கொடுத்தார். போட்டியின் 5வது ஓவரில் ரவி பிஷ்னோய் பந்தை சுழற்றினார். இதன் 5வது பந்தில் கோலி (32 ரன், 16 பந்து) போல்டாக, அதிர்ச்சியுடன் திரும்பினார். மீண்டும் வந்த பிஷ்னோய், இம்முறை ஹெட்மயரை, ஒரு ரன்னில் வெளியேற்றினார். ஜிதேஷ் சர்மா (5), டேவிட் (13), ஷெப்பர்டு (22) அடுத்தடுத்து அவுட்டாகினர்.
படிதர் அரைசதம்
சந்தீப் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய படிதர், அரைசதம் அடித்தார். இவர் 40 பந்தில் 63 ரன் எடுத்த போது, சந்தீப் பந்தில் அவுட்டானார்.
பெங்களூரு அணி 20 ஓவரில் 201/8 ரன் எடுத்தது. வெங்கடேஷ் ஐயர் (29), புவனேஷ்வர் (9) அவுட்டாகாமல் இருந்தனர். ராஜஸ்தான் சார்பில் ஆர்ச்சர், பிஷ்னோய், பிரிஜேஷ் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
வைபவ் விளாசல்
ராஜஸ்தான் அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால் (13) ஜோடி துவக்கம் கொடுத்தது. அபிநந்தன் ஓவரில் 4, 4, 6 என அடித்தார் வைபவ். அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் வீசிய 4வது ஓவரில் கடைசி 4 பந்தில் தொடர்ந்து 4, 4, 4, 6 என அடித்து மிரட்டினார் வைபவ்.
புவனேஷ்வர் ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்சர் அடித்த 15 வயது வைபவ், 15 பந்தில் அரைசதம் அடித்தார். இவருக்கு 'கம்பெனி' கொடுத்த ஜுரல், அபிநந்தன் வீசிய 6வது ஓவரில் 24 ரன் (4, 6, 4, 6, 4) விளாசினார்.
திடீர் திருப்பம்
வைபவ், ஜுரல் ஜோடி 37 பந்தில் 108 ரன் எடுக்க, ராஜஸ்தான் அணி 8 ஓவரில் 129/1 ரன் குவித்தது. 9 வது ஓவரை குர்னால் பாண்ட்யா வீசினார். முதல் பந்தில் வைபவ் (78 ரன், 26 பந்து), அடுத்த பந்தில் ஹெட்மயர் (0) அவுட்டாகினர். ரியான் பராக் (3) ஹேசல்வுட் 'வேகத்தில்' வீழ்ந்தார். 129/1 என இருந்த ராஜஸ்தான் அணி, 134/4 என ஆனது.
ஜுரல், ஜடேஜா இணைந்தனர். பொறுப்பாக செயல்பட்ட ஜுரல், இத்தொடரில் 2வது அரைசதம் அடித்தார். கடைசியில் ஷெப்பர்டு பந்தில் ஜுரல் ஒரு சிக்சர் அடிக்க, ராஜஸ்தான் அணி 18 ஓவரில் 202/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஜுரல் (81 ரன், 43 பந்து), ஜடேஜா (24) அவுட்டாகாமல் இருந்தனர்.
15 பந்தில்...
கிரிக்கெட் லீக் அரங்கில் குறைந்த பந்தில் அரைசதம் அடித்தவர்களில் மூன்றாவது இடத்தை, யூசுப் பதானுடன் (2014) பகிர்ந்து கொண்டார் வைபவ் (2026ல் 2 முறை). இருவரும் தலா 15 பந்தில் அரைசதம் அடித்தனர். முதல் இரு இடத்தில் ஜெய்ஸ்வால் (13 பந்து, 2023), ராகுல் (14, 2018) உள்ளனர்.
இரண்டாவது இந்தியர்
நேற்று 8 ரன் எடுத்த போது, 'டி-20' கிரிக்கெட்டில் 4000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார் ஜடேஜா. தவிர, பவுலிங்கில் 200க்கும் மேல் விக்கெட் வீழ்த்திய இரண்டாவது இந்தியர் ஆனார் ஜடேஜா (4016 ரன், 237 விக்.,). முதலிடத்தில் ஹர்திக் பாண்ட்யா (6165 ரன், 227 விக்.,) உள்ளார். ஒட்டுமொத்த 'டி-20' அரங்கில் 25 வது வீரர் ஆனார் ஜடேஜா.
மூன்றாவது முறை
கிரிக்கெட் லீக் அரங்கில் போட்டியின் முதல் பந்தில், அதிக முறை விக்கெட் வீழ்த்திய பவுலர்களில் ராஜஸ்தானின் ஆர்ச்சர், இரண்டாவது இடத்தை பிரவின் குமார், உமேஷ் யாதவ், பவுல்ட், மலிங்கா, புவனேஷ்வர் குமார், டிண்டா, கம்மின்சுடன் பகிர்ந்து கொண்டார். அனைவரும் தலா 3 முறை இதுபோல அசத்தினர். முதலிடத்தில் முகமது ஷமி (5) உள்ளார்.
மேலும்
-
தேன் இறக்குமதி விலை டிச., 31 வரை நீட்டித்தது அரசு
-
அமெரிக்க 'மேஜிக்' ஜவுளி கண்காட்சி ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க அரசு மானியம்
-
'மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்திருத்தம் அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல்': காங்., தலைவர் கார்கே குற்றச்சாட்டு
-
பேக்கேஜிங் பொருட்கள் விலை உயர்வு ஐஸ்கிரீம் தயாரிப்பு தொழில் பாதிப்பு
-
முருங்கை ஏற்றுமதி 40% சரிவு உள்நாட்டில் விற்க முயற்சி
-
காசோலைகள் பணமின்றி திரும்பினால் இயக்குநர்களை தண்டிக்க முடியாது 'செக் பவுன்ஸ்' வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு