மதுரையில் 10 தொகுதிகளையும் இழந்ததால் அ.தி.மு.க., அதிர்ச்சி
மதுரை: 'மதுரை அ.தி.மு.க.,வின் கோட்டை' என பெருமை பேசிவந்த அக்கட்சிக்கு 10 தொகுதிகளில் ஒரு தொகுதிகூட கிடைக்காதது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021 தேர்தலில் மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் மதுரை மேற்கு, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மேலுார், உசிலம்பட்டி ஆகிய 5 தொகுதிகளை அ.தி.மு.க., கைப்பற்றியது. இத்தேர்தலில் 5 தொகுதிகளோடு மதுரை கிழக்கு, மதுரை மத்தி, சோழவந்தான், மதுரை வடக்கு தொகுதிகளில் போட்டியிட்டது. கூட்டணியில் உள்ள பா.ஜ.,வுக்கு மதுரை தெற்கு தொகுதியை கொடுத்தது.
இதில் 8 தொகுதிகள் வரை அ.தி.மு.க., வெற்றி பெறும் என பலரும் தங்கள் கருத்தை கூறி வந்தனர்.
திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரம் தங்களுக்கு சாதகமாக அமையும் என அத்தொகுதியை அ.தி.மு.க., எதிர்பார்த்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக நேற்றைய தேர்தல் முடிவுகள் அடுத்தடுத்து அ.தி.மு.க., தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் விஜய் அலையால், ஒரு தொகுதியில்கூட அ.தி.மு.க., வெற்றி பெறமுடியவில்லை. அனைத்து தொகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் 2வது இடம், 3வது இடங்களையே அ.தி.மு.க., பெற்றது. தி.மு.க., கூட்டணியில் திருமங்கலத்தில் மணிமாறனும், மேலுாரில் காங்., விஸ்வநாதனும் வெற்றி பெற்றுள்ளனர்.
மதுரையில் கடந்த ஆகஸ்ட்டில் விஜய் மாநாடு நடத்தியதோடு சரி. தற்போது பிரசாரத்திற்கு வரவில்லை. என்றாலும் அறிமுகம் இல்லாத 8 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். திராவிட கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என தமிழக அளவில் ஒரு மவுன புரட்சியை ஏற்படுத்திய மக்களின் மனநிலைக்கு மதுரையும் தப்பவில்லை.