அசாமில் பா.ஜ.,வின் வெற்றிக்கு வழிவகுத்த தொகுதி மறுவரையறை

1

குவஹாத்தி: அசாம் சட்டசபை தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி 102 தொகுதிகளை கைப்பற்றி, இமாலய வெற்றி பெற்றதற்கு, 2023ல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையே முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான அசாமில் 126 தொகுதிகள் கொண்ட சட்டசபைக்கு, கடந்த 9ல் தேர்தல் நடந்தது. பதிவான ஓட்டுகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியை பிடித்தது.

ஓட்டு வங்கி




அசாமில் இதுவரை நடந்த தேர்தல்களில், காங்கிரஸ் மற்றும் ஏ.ஐ.யு.டி.எப்., எனப்படும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் வெற்றிக்கு சிறுபான்மையின ஓட்டு வங்கி முக்கிய பங்காற்றியது.

கடந்த 2011 மக்கள் தொகை அடிப்படையில், 2023ல் நடத்தப்பட்ட தொகுதி மறுவரையறை காரணமாக, 35 தொகுதிகளில் இருந்த சிறுபான்மையின ஓட்டு வங்கி செல்வாக்கு 25 ஆக சுருங்கியது. இதனால், இந்த தேர்தலில், காங்கிரஸ் மற்றும் ஏ.ஐ.யு.டி.எப்., தங்கள் கோட்டைகளாக கருதப்பட்ட இடங்களில் பெரும் பின்னடைவை சந்தித்தன.

வெற்றி பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர்கள் 24 பேரில், 22 பேர் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள். அதுவும், தொகுதி மறுவரையால் பாதிக்கப்படாத தொகுதிகளில் போட்டியிட்டவர்கள்.

தொகுதி மறுவரையறையால் தொகுதிகளின் எண்ணிக்கை உயரவில்லை என்றாலும், பழங்குடியினருக்கான 16 தனித் தொகுதிகள், 19 ஆக அதிகரித்தது. அதே போல், பட்டியலின தனித் தொகுதியின் எண்ணிக்கை கூடுதலாக ஒன்று அதிகரித்து ஒன்பதாக உயர்ந்தது.

குறிப்பாக, வங்கமொழி பேசும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பார்பெட்டா மற்றும் கோல்பாரா மேற்கு தொகுதிகள் பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டன. கடந்த காலங்களில் காங்கிரஸ் வசம் இருந்த இந்த இரு தொகுதிகளையும் தற்போது, பா.ஜ., கைப்பற்றி இருக்கிறது.

போடோலாந்து பகுதியில் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளிலும், தொகுதி மறுவரையறையின் விளைவுகளை காண முடிந்தது.

இமாலய வெற்றி




அந்த பகுதியில், 11ஆக இருந்த தனித் தொகுதிகள் 15 ஆக அதிகரிக்கப்பட்ட நிலையில், தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்ற போடோலாந்து மக்கள் முன்னணி 10 தொகுதிகளை எளிதாக கைப்பற்றியது.

கடந்த தேர்தல்களில் 16 தொகுதிகள் வரை கைப்பற்றிய ஏ.ஐ.யு.டி.எப்., இந்த முறை வெறும் இரு தொகுதிகளை மட்டுமே வென்றுள்ளது. அதுவும் சிறுபான்மையின ஓட்டு வங்கி செல்வாக்கு சுருக்கப்பட்ட 25 தொகுதிகளிலேயே இதை வென்றுள்ளது.

தேர்தல் நடப்பதற்கு முன், தொகுதி மறுவரையறையால் பா.ஜ., இம்முறை அதிக இடங்களை வெல்லும் என முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியிருந்தார்.

அதை உறுதிபடுத்தும் வகையில், பா.ஜ., 82 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகளான போடோலாந்து மக்கள் முன்னணி மற்றும் அசாம் கண பரிஷத் தலா 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

எதிர்க்கட்சியான காங்., 19 இடங்களிலும், ராய்ஜோர் தளம் மற்றும் ஏ.ஐ.யு.டி.எப்., தலா இரு இடங்களிலும், திரிணமுல் காங்., ஒரு தொகுதியிலும் வென்றுள்ளன.

சிறுபான்மையின ஓட்டுவங்கி செல்வாக் கை நீர்த்துப் போக வைத்து, பழங்குடி மற்றும் பூர்வக்குடி மக்களின் ஓட்டுகளை ஒருங்கிணைத்ததே பா.ஜ.,வின் இமாலய வெற்றிக்கு காரணம் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement