'இண்டி' கூட்டணியில் விஜய்? காங்., - எம்.பி., சசி தரூர் பதில்!

1

திருவனந்தபுரம்: ''இண்டி கூட்டணியில் சேர த.வெ.க., தலைவர் விஜயும் அழைக்கப்படலாம்,'' என, காங்., மூத்த தலைவரும், அக்கட்சியின் லோக்சபா எம்.பி.,யுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 140 தொகுதிகளில், 100ல் வெற்றி பெற்று, காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

தேர்தல் முடிவுகள் குறித்து, தனியார் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றிற்கு, காங்கிரசைச் சேர்ந்த திருவனந்தபுரம் லோக்சபா எம்.பி., சசி தரூர் அளித்த பேட்டி:

கேரளாவில், காங்., கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு வழங்கி உள்ளனர். காங்கிரசில் அனுபவம் வாய்ந்த, தகுதியுள்ள தலைவர்கள் பலர் உள்ளனர். இது ஒரு மகிழ்ச்சியான சவால். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-.,க்களுடன் கலந்தாலோசித்து, கட்சி மேலிடத்தின் ஒப்புதலோடு விரைவில் முதல்வர் பெயர் அறிவிக்கப்படும். இதில் எந்தவித இழுபறியும் இருக்காது.

தமிழகத்தில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜயின் த.வெ.க.,வுக்கு வாழ்த்துகள். தற்போதுள்ள சூழலில் த.வெ.க.,வுக்கு ஆட்சி அமைக்க இன்னும் சில இடங்கள் தேவைப்படலாம். இண்டி கூட்டணியில் உள்ள காங்., - இடதுசாரி, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளிடம் போதிய எம்.எல்.ஏ-.,க்கள் உள்ளனர். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இண்டி கூட்டணியில் இணைய விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement