புதிய கட்டத்தை எட்டியது இந்தியா - சைப்ரஸ் உறவு; மோடி முன்னிலையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுடில்லி: இந்தியா -மற்றும் சைப்ரஸ் நாட்டுக்கு இடையிலான உறவு, முக்கியமான உயர்மட்ட உறவு என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.

மேற்காசிய நாடான சைப்ரஸ் தீவின் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் நான்கு நாள் பயணமாக கடந்த 20ம் தேதி மும்பை வந்தார். அங்கு வர்த்தக மற்றும் முதலீடுகள் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்றார்.

இதைத் தொடர்ந்து டில்லிக்கு வந்தார். அங்கு உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். இரு தலைவர்கள் இடையே நடந்த பேச்சில், உள்கட்டமைப்பு, கப்பல் போக்குவரத்து, பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் கூட்டு பணிக்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. பல முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

இந்தியா - சைப்ரஸ் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில், இரு தரப்பு உறவு முக்கியமான உயர்மட்ட உறவு என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது. இதற்கான அறிவிப்பை செய்தியாளர்கள் சந்திப்பின் போது பிரதமர் அறிவித்தார்.

மேலும் பிரதமர் மோடி கூறுகையில், “இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளது. சைப்ரஸ் இந்தியாவில் செய்துள்ள முதலீடு கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்துள்ளது,” என்றார்.

சந்திப்பின் போது சைப்ரஸ் அதிபர் நிகோஸ், பிரதமர் மோடியுடன், 'செல்பி' புகைப்படம் எடுத்து அதை தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

Advertisement