விடாமுயற்சி உழைப்பால் வெற்றி சாத்தியம்!

'விலாஸ் கேக் பொட்டிக்' என்ற பெயரில், வீட்டிலேயே கேக் செய்து விற்பனை செய்து வரும் திருப்பூரை சேர்ந்த, 26 வயதான, விலாசினி:

நான் கல்லுாரி படித்துக் கொண்டிருந்தபோது, எங்கள் குடும்ப பொருளாதார நிலை திடீரென மோசமானது. நாமும் ஏதாவது செய்ய வேண்டுமே என்று தோன்றியபோது தான், கேக் செய்யும் தொழிலை துவங்கினேன். ஆரம்பத்தில், கேக் செய்தபோது சரியாக வரவில்லை.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், இப்போது போல இணையதள வசதிகளோ அல்லது செய்முறை விளக்க காணொளிகளோ கிடையாது. ஆனாலும், பலமுறை தோல்வி அடைந்த பின், கடும் முயற்சி செய்து, கேக் தயாரிப்பை கற்றுக் கொண்டேன்.

ஆரம்பத்தில், வீட்டில் உள்ளோர் பொருட்களை வீணாக்குவதாக திட்டினர். கல்லுாரி விடுமுறை நாட்களில், நான் செய்த கேக்குகளை, என் தோழியரும், அக்கம் பக்கத்தாரும் பாராட்டியபோது எனக்குள் நம்பிக்கை துளிர்விட்டது.

என் கல்லுாரி விடுதியில் உள்ள சக தோழியரின் பிறந்தநாள் விழாக்களுக்கு கேக் தயாரித்து, விற்பனை செய்ய துவங்கினேன்.

அதன் வாயிலாக கிடைத்த வருமானத்தை என் செலவுக்கும், வீட்டு செலவுக்கும் பயன்படுத்திக் கொண்டேன். கொரோனா காலத்தில், கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த போதுதான், என் வியாபாரம் வளர்ச்சி அடைந்தது.

சமூக வலைதளங்கள் வாயிலாக, 'ஆர்டர்'கள் நிறைய வந்தன. குறிப்பாக, நான் அறிமுகப்படுத்திய, 'ரோஸ் மில்க் கேக்' என் அடையாளமாகவே மாறியது. ஆரம்பத்தில், தொழிலுக்கு தேவையான பொருட்களை தவணை முறையில் வாங்கி, என் உழைப்பிலேயே கடனை அடைத்தேன்.

தற்போது, வீட்டில் இருந்தபடியே கேக் தயாரித்து விற்பனை செய்கிறேன். 10 பேக்கரிகளுக்கு கேக் தயாரித்து கொடுக்கிறேன். இந்த பொருளாதார சுதந்திரம் எனக்கு பிடித்திருக்கிறது.

எல்லா பெண்களும், இதே சுதந்திரத்தை விடாமுயற்சி மற்றும் உழைப்பால் அடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் தான், மற்றவர்களுக்கும் கேக் தயாரிப்பை கற்றுக் கொடுக்கிறேன். இதுவரை, 400 பேருக்கு கற்றுக் கொடுத்துள்ளேன்.

கேக் தயாரிப்பு, பயற்சி வகுப்பு என மாதம் 80,000 ரூபாய் வரை வருமானமும், லாபமாக 40,000 ரூபாயும் கிடைத்து வருகிறது. தொழில் வெற்றியை விட, தனிப்பட்ட முறையில் இது இன்னும் ஆத்ம திருப்தியை அளிக்கிறது.

'நல்ல வேலைக்கு போ... கேக் தயாரித்து விற்பனை செய்வதெல்லாம் உனக்கு தேவையா?' என்று, பலரும் ஆரம்பத்தில் நம்பிக்கை குறைவாக பேசினர். ஆனால், இன்று என் வெற்றியை ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

நம் உள்ளுணர்வு சொல்வதை துணிச்சலாக செய்தபடியே இருக்க வேண்டும்; தயங்கினால், வெற்றி வசப்படாது!

தொடர்புக்கு 90802 64137





 குடும்பத்துடன் வெற்றிகரமான விவசாயம்!


புதுக்கோட்டை மாவட்டம், பாலாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த, 64 வயதாகும் ராஜேந்திரன்:
என் அப்பா, 4 ஏக்கர் பரப்பில் நெல், நிலக்கடலை விவசாயம் செய்து வந்தார். நான் தகவல் தொழில்நுட்ப படிப்பு முடித்து, திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள, 'பெல்' நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். எனக்கு திருமணமானபோது, 2 ஏக்கர் நிலத்தை அப்பா கொடுத்தார்.

க டந்த 1990ம் ஆண்டு, 1.5 ஏக்கர் பரப்பில், 110 தென்னை மரங்களை நடவு செய்து, மீதி அரை ஏக்கர் பரப்பில், பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய ஆரம்பித்தேன். ஓராண்டுக்கு, ஒரு தென்னை மரத்தில் இருந்து சராசரியாக, 125 தே ங்காய்கள் கிடைத்தன.

நான் சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக, 10 ஏக்கர் அளவுக்கு நிலங்கள் வாங்கி, மரப்பயிர்களை நடவு செய்தேன். மொத்தம், 12 ஏக்கர் பரப்பில், 30 செம்மரங்களையும், 160 தேக்கு மரக்கன்றுகளையும் நடவு செய்தேன்.

செம்மரங்கள் குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சி அடைந்தன. அதனால், ஆர்வம் அதிகமாகி, 2007ல் 60 செம்மரங்களை நட்டேன்.

அவையும் நன்கு வளர்ந்தன. 160 தேக்கு மரங்களில், 100 மரங்களை மட்டும் வெட்டி, வீட்டுக்கு தேவையான கட்டில், சோபா என்று செய்தது போக, மீதி மரங்களை, 1.20 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தேன்.

மரங்கள் முதிர்ச்சி அடைவதற்குள் அறுவடை செய்ததால், நல்ல விலை கிடைக்கவில்லை. மீதி, 60 தேக்கு மரங்கள் செழிப்பாக வளர்ந்து நிற்கின்றன.

ஆரம்பத்தில் நடவு செய்த, 30 செம்மரங்களும் கிட்டத்தட்ட, 30 வயதில் முதிர்ச்சி அடைந்து, வைரம் பாய்ந்து அறுவடைக்கு தயாராக இருக்கின்றன. மொத்தம், 30 மரங்களும் சேர்த்து, 6 டன் எடை இருக்கும்.

டன்னுக்கு, 22 லட்சம் ரூபாய் கொடுப்பதாக ஒரு வியாபாரி சொல்கிறார். நான் ஒரு டன்னுக்கு, 25 லட்சம் ரூபாய் வரை எதிர்பார்க்கிறேன். அந்த விலைக்குதான் விற்பனை செய்வேன்.

கடந்த 2010ல், 4 ஏக்கர் பரப்பில், 300 தென்னை மரங்கள் நடவு செய்தேன். ஒரு மரத்தில் இருந்து ஆ ண்டுக்கு சராசரியாக, 150 தேங்காய்கள் கிடைக்கின்றன.

ஐந்து ஆண்டு களுக்கு முன், 4 ஏக்கர் பரப்பில், 250 தென்னங்கன்றுகள் நடவு செய்தேன். அவை ஓரளவு வளர்ந்ததும், மிளகு சாகுபடி செய்து, இந்த மரங்களில் மிளகுக் கொடியை ஏற்றிவிடலாம் என்ற யோசனையும் உள்ளது.

ஓடியாடி நன்றாக வேலை செய்து கொண்டிருக்கிறேன். என்னுடன் மனைவி மற்றும் இரண்டு மகன்களும் விவசாய வேலைகளை ஆர்வமாக செய்கின்றனர்; அனைவருடைய ஒத்துழைப்பும் இருப்பதால், விவசாயத்தை வெற்றிகரமாக செய்ய முடிகிறது.

தொடர்புக்கு:94431 73109.

Advertisement