'காஸ்' சிலிண்டர் வினியோகம் தாமதம் ஏஜன்சிகளுக்கு படையெடுக்கும் மக்கள்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வீடுகளுக்கு சமையல் 'காஸ்' சிலிண்டர் வினியோகம் 10 நாட்களுக்கு மேல் தாமதமாவதால், வாடிக்கையாளர்கள் ஏஜன்சிகளுக்கு சென்று வருகின்றனர்.

எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டரை வினியோகம் செய்கின்றன.

10 நாட்கள் மேற்காசிய நாடுகளில் நடக்கும் போர் காரணமாக, நம் நாட்டில் வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, வணிக சிலிண்டர் வினியோகத்திற்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது.

கடந்த மாதத்தில் சிலிண்டர் வரத்து அதிகரித்ததால், தட்டுப்பாடு நீங்கியது.

இதனால், முன்பதிவு செய்ததில் இருந்து ஐந்து நாட்களுக்குள், 'காஸ்' சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டன.

மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், காஸ் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை சோழிங்கநல்லுார், கோடம்பாக்கம், ஆலந்துார், வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் முன்பதிவு செய்து, 10 நாட்களுக்கு மேலாகியும் சிலிண்டர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

காரணம் என்ன? வேறு வழியின்றி தாமதத்திற்கான காரணம் குறித்து ஏஜன்சிகளுக்குநேரில் சென்று கேட்டு வருகின்றனர்.

'காஸ்' தட்டுப்பாடு காரணமாக, பயனாளியின் உண்மை தன்மையை சரிபார்க்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால், 'காஸ்' இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, அவர் ஏஜன்சிக்கு சென்று விரல் ரேகை அல்லது விழி ரேகை அல்லது முக பதிவு செய்து, உண்மை சரிபார்ப்பு செய்ய வேண்டும்.

இந்த சரிபார்ப்பு பணியை முடிக்காதவர்களுக்கு, முன்பதிவு செய்தாலும் வினியோகம் செய்வதற்கான கட்டண ரசீதை ஏஜன்சிகளால் எடுக்க முடியாததால், சிலிண்டர் வினியோகம் தாமதமாகும் என கூறப்படுகிறது.

நடவடிக்கை எடுப்பரா? பாதிக்கப்பட்ட மக்கள் கூறியதாவது: முன்பதிவு செய்து 10 நாட்களுக்கு மேலாகியும் சிலிண்டர் வராதது குறித்து, ஏஜன்சிகளில் சென்று கேட்டால், 'இன்னும் சில நாட்களாகும்' என, கூறுகின்றனர். தாமதம் குறித்து தெரிவிப்பதில்லை; எனவே, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஏஜன்சிகளில் ஆய்வு செய்து, சிலிண்டர் விரைவாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement