சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி லிட்டில் மாஸ்டர் சி.ஏ., அணி வெற்றி

சென்னை: சிறுவர்களுக்கான 'பிரேயர்' கிரிக்கெட் போட்டியில், லிட்டில் மாஸ்டர் சி.ஏ., அணி வெற்றி பெற்று அசத்தியது.

கோடைக்காலத்தை முன்னிட்டு, எல்.எம்.சி.ஏ., எனும் லிட்டில் மாஸ்டர் கிரிக்கெட் அகாடமி சார்பில், 'பிரேயர் லாஜிஸ்டிக்ஸ் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள், புழல் கே.வி.டி., மைதானத்தில் நடக்கின்றன.

இதில், 12, 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளின் அடிப்படையில் போட்டிகள் நடக்கின்றன. இதில், பல்வேறு பள்ளிகள் மற்றும் அகாடமிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன.

* யு - 14 பிரிவில், லிட்டில் மாஸ்டர் அணி 25 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய பத்ம சாரங்கபாணி சி.ஏ., அணி, 25 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. கவுதம் கைலாஷநாதன் 6 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு காரணமானார்.

* யு - 12 பிரிவில், ஜி.எப்.சி.ஏ., அணி ரன் மழை பொழிந்து, 25 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது. அந்த அணிக்காக தீராஜ் சாய் 62 பந்துகளில் 100 ரன்கள் விளாசி கவனம் ஈர்த்தார். அடுத்து விளையாடிய பத்மசாரங்கபாணி சி.ஏ., அணி 9 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

* யு - 16 பிரிவில், ஜி.எப்.சி.ஏ., அணி 157 ரன்களில் ஆல் அவுட்டானது. வருண் சாய் 60 ரன்கள் எடுத்தார். எதிரணியின் விஸ்வஜித் 22 ரன்கள் மட்டுமே கொடுத்து, 5 விக்கெட்டுகளை சாய்த்தார். தொடர்ந்து விளையாடிய எல்.எம்.சி.ஏ., அணி 21.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பேட்டிங்கிலும் விஸ்வஜித் அபாரமாக விளையாடி, ஆட்டமிழக்காமல் 95 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

Advertisement