3 செமஸ்டர் கட்டணத்தையும் மொத்தமாக செலுத்த உத்தரவு தொலை துார கல்வி மாணவர்கள் அதிருப்தி

கோவை: பாரதியார் பல்கலையின் தொலைதுார மற்றும் ஆன்லைன் கல்வி மையத்தில் நிர்வாக குளறுபடிகள் தொடர்கின்றன.

2025 ஜூன் மாதம், முதுநிலை மாணவர்களுக்கு ஒரு செமஸ்டருக்கான பாடங்கள் மட்டுமே நடத்தப்பட்டு, தேர்வுகள் நடந்தன. மீதமுள்ள 2, 3, 4 வது செமஸ்டர்களுக்கான கட்டணத்தையும் மொத்தமாக செலுத்துமாறு கூறியுள்ளனர்.

“முழு கட்டணத்தையும் ஜூன் 30க்குள் செலுத்த வேண்டும். தாமதித்தால் அபராதத்துடன் செலுத்த வேண்டும். செலுத்தாத மாணவர்கள் தேர்வு எழுதவோ நேரடி வகுப்புகளில் பங்கேற்கவோ அனுமதி கிடையாது” என்று நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:

முதுநிலை மாணவர்கள், ஓராண்டுக்கும் மேலாக காத்திருந்து இப்போதுதான் முதல் செமஸ்டர் தேர்வுகளை எழுதி உள்ளனர். மீதி 3 செமஸ்டர்களையும் அவசரமாக ஒரே ஆண்டில் முடிக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. பாடங்களும் நடத்தவில்லை, தேர்வுகளும் அறிவிக்கவில்லை; அதற்குள் 3 செமஸ்டர் கட்டணத்தையும் முன்கூட்டியே செலுத்த உத்தரவிடுவது நியாயம் அல்ல.  

தொலைதுார கல்வியில் பயில்வோர் பெரும்பாலும் வேலைக்கு செல்பவர்கள், இல்லத்தரசிகள், நடுத்தர வர்க்கத்தினர். திடீரென மொத்தமாக ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை கட்டு என்றால் எங்கே போவோம்? இந்த அறிவிப்பை பல்கலைக்கழகம் திரும்ப பெற வேண்டும்.

Advertisement