ரயில்வே சுரங்க நடைபாதை 'க்ளீன்' மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

தாம்பரம்: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, தாம்பரத்தில் குற்றங்களின் கூடாரமாக மாறியிருந்த சுரங்க நடைபாதையை, மாநகராட்சி நிர்வாகம் சுத்தம் செய்து, நேற்று பயன்பாட்டிற்கு திறந்தது.

தாம்பரத்தில், மேற்கு - கிழக்கு பகுதிகளில் இருந்து, தினமும் ஏராளமானோர் ரயில்வே லைனை கடந்து, ஆபத்தான வகையில் சென்று வருகின்றனர். இதனால், அவ்வப்போது, ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இதை கருத்தில் வைத்து, தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலையில் இந்து மிஷன் மருத்துவமனை எதிரே, ரயில்வே லைனை கடக்கும் வகையில், சுரங்க நடைபாதை கட்டப்பட்டுள்ளது.

நாளடைவில், பராமரிப்பு மோசமானதால், சமூக விரோத செயல்கள் நடக்கும் பகுதியாக மாறியது. செயின் பறிப்பு, வழிப்பறி போன்ற குற்ற செயல்கள் அதிகமாக நடந்தன. இதனால், இரவில் பயன்படுத்த மக்கள் அச்சப்பட்டனர். அதன்பின், இச்சுரங்க நடைபாதை மூடப்பட்டது.

பல ஆண்டுகளாக மூடியே உள்ளதால், குற்றங்களின் கூடாரமாக மாறியதோடு, நுழைவாயிலில் செடி, கொடிகள் வளர்ந்து புதராகவும் மாறியது.

இப்பிரச்னை குறித்து, சில நாட்களுக்கு முன், நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம், இச்சுரங்க நடைபாதையை சீரமைத்து, நேற்று பயன்பாட்டிற்கு திறந்தது.

சுரங்க நடைபாதையினுள் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. சுவரில் வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. சுரங்க நடைபாதை பயன்பாட்டிற்கு திறந்தாலும், இரவில் போலீசாரை பணியமர்த்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement