மகளிர் சுகாதார வளாகத்தை பராமரிப்பதில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம்

கடம்பத்துார்: மகளிர் சுகாதார வளாகங்களை பராமரிப்பதில், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால், கடம்பத்துார் ஒன்றியத்தில் பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட, 43 ஊராட்சிகளிலும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், பெண்கள் பயன்பாட்டிற்காக, 3 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

இந்த சுகாதார வளாகங்களை, இப்பகுதி பெண்கள் பயன்படுத்தி வந்தனர். இதில், சில ஊராட்சிகளில் மட்டும், மகளிர் சுகாதார வளாகங்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போதும் பயன்பாட்டில் உள்ளன.

ஆனால், பெரும்பாலான ஊராட்சிகளில், இந்த மகளிர் சுகாதார வளாகங்கள், போதிய பராமரிப்பின்றி, தண்ணீர் வசதி இல்லாமலும், செடிகள் வளர்ந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால், பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், மகளிர் சுகாதார வளாகங்களை பராமரிப்பதற்கு, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக, பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக, கடம்பத்துார் ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில், மகளிர் சுகாதார வளாகம் பராமரிப்பின்றி, செடிகள் சூழ்ந்து உள்ளது.

எனவே, மாவட்ட கலெக்டர், ஊராட்சி பகுதிகளில் ஆய்வு செய்து, மகளிர் சுகாதார வளாகங்களை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement