தண்ணீர் பேரலில் விழுந்து 2 வயது சிறுமி உயிரிழப்பு
அம்பத்துார்: வீட்டின் குளியல் அறையில் இருந்த தண்ணீர் பேரலில் தலைகுப்புற விழுந்து, 2 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரைச் சேர்ந்தவர் கலையரசன், 40. இவரின் மனைவி இந்துமதி, 37. இவர்களின் குழந்தை யுவராணி, 2.
கருத்து வேறுபாட்டால், தம்பதி பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன், குற்றவழக்கில் மதுரவாயல் போலீசாரால் கைது செய்யப்பட்ட இந்துமதி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, ஒரகடம், கம்பர் தெருவில் உள்ள பாட்டி சந்திரா, 62, சிறுமி யுவராணியை பராமரித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, சந்திரா கடைக்கு சென்ற நிலையில், சிறுமி யுவராணி வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார்.
சந்திரா திரும்பி வந்து பார்த்தபோது, சிறுமியை காணவில்லை. வீட்டின் குளியல் அறையில் சென்று பார்த்தபோது, ஒன்றரை அடி தண்ணீர் பேரலில், குழந்தை தலைகுப்புற கவிழ்ந்து விழுந்து, மயங்கிய நிலையில் கிடந்தது.
சிறுமியை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, மருத்துவ பரிசோதனையில் குழந்தை இறந்தது தெரிந்தது.
அம்பத்துார் போலீசார், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.