கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு :மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

தேனி:தேனி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறந்தன. முதல் நாள் வகுப்புக்கு வந்த பள்ளி மாணவ, மாணவியர்களை ஆசிரியர்கள் சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முன்னதாக வகுப்பறைகள், பாத்ரூம், பள்ளி வளாகம் சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்து இருந்தனர். நேற்று பள்ளிகள் திறந்ததால் மாணவர்கள் ஆர்வத்துடன் வந்தனர்.

பாலார்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் நேற்று வந்த மாணவர்களுக்கு துண்டு அணிவித்து, ரோஜா பூக்கள், இனிப்பு வழங்கி மலர் துாவி வரவேற்றனர். மேலும் மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் வரவேற்பில் வட்டாரக்கல்வி அலுவலர் பாண்டி லட்சுமி, தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் புஸ்பராணி, ஆசிரியர்கள் தெய்வசங்கரி, இந்துராணி, கலையரசி, முருகையா விவேகா ஆகியோர் வரவேற்றனர்.

அரசு பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு வரவேற்பு

ஆண்டிபட்டி: டி.சுப்புலாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 42 மாணவர்கள் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர். முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்களை பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்று வரவேற்றனர். பள்ளியில் நடந்த விழாவில் டி.இ.ஓ., நாகலட்சுமி தேசியக்கொடி ஏற்றினார். வட்டார கல்வி அலுவலர் வீராசாமி தலைமை ஆசிரியர் ராஜாராம் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மற்றும் மாணவர்கள் வளர்ச்சி குறித்து ஆசிரியர்கள் பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடந்தது.

Advertisement