கல்குவாரி துவங்குவதற்காக ரகசிய தீர்மானம் கிராம சபை கூட்டத்தில் காரசாரம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஒன்றியத்தில் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில், சொக்கனூர் ஊராட்சியில் கல்குவாரி குறித்து பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளால் பரபரப்பு ஏற்பட்டது.

கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், நேற்று, சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் மற்றும் மக்கள் பங்கேற்றனர். சொக்கனூர் ஊராட்சி அலுவலக வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மைத்திட்ட விதிகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் நடந்த கிராம சபை கூட்டத்தில், சட்டக்கல்புதூரில் கைவிடப்பட்ட குவாரியை துவங்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சார்பில் மனு வழங்கப்பட்டது. தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இதே குவாரிக்கு அனுமதி வழங்க கோரி மக்கள் சார்பில் அளித்த மனுவை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதனால், ஊராட்சி செயலாளருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்துக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஷ்குமார் மற்றும் மோகன்பாபு இந்த சம்பவம் குறித்து மக்களிடையே கேட்டறிந்தனர்.

அதன்பின், இந்த குவாரி செயல்பட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த குவாரிக்கு அனுமதி வழங்க கூடாது, என, பதிவேட்டில் எழுதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்கள் கூறியதாவது:

சட்டக்கல்புதூரில் கைவிடப்பட்ட குவாரியை துவங்க எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜனவரி மாதம் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டம் முடிந்தபின் பெயர் குறிப்பிடாமல் பொதுமக்கள் சார்பில் குவாரியை துவங்கினால், வேலைவாய்ப்பு மற்றும் ஊராட்சிக்கு வருவாய் கிடைக்கும் என, குவாரிக்கு ஆதரவு தெரிவித்து ரகசியமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இனிமேல் இதுபோன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் காலங்களில் சொக்கனூர் ஊராட்சியில் புதிதாக எந்த கல்குவாரிக்கும் அனுமதி வழங்க கூடாது. இதற்கு தற்போதுள்ள த.வெ.க., அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

Advertisement