துருக்கியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா: உலக கோப்பை கால்பந்தில்
வான்கூவர்: கனடாவின் வான்கூவரில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, துருக்கி அணிகள் மோதின. இப்போட்டியை காண 52,497 பேர் வந்தனர். ஏழாவது முறையாக உலக கோப்பையில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வெற்றியுடன் துவக்கியது. ஆஸ்திரேலிய அணிக்கு நெஸ்டோரி இரான்குண்டா (27வது நிமிடம்), கானர் மெட்கால்ப் (75வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். 24 ஆண்டுகளுக்கு பின், உலக கோப்பையில் விளையாடும் துருக்கி அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் அரணாக இருந்த அறிமுக கோல்கீப்பர் பாட்ரிக் பீச் 22, துருக்கி அணியினரின் 8 கோல் அடிக்கும் வாய்ப்புகளை தடுத்தார்.
சுவிட்சர்லாந்து அணிக்கு 'ஷாக்'
சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் கத்தார், சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியை காண 67,966 ரசிகர்கள் வந்தனர். ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் சுவிட்சர்லாந்தின் பிரீல் எம்போலோ ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றுத்தந்தார். இதற்கு, 90 நிமிடம் வரை கத்தார் அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இரண்டாவது பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+4வது நிமிடம்) கத்தார் வீரர் ஹோமம் அஹ்மது 'கோல் போஸ்ட்டை' நோக்கி துாக்கி அடித்த பந்தை சுவிட்சர்லாந்தின் மிரோ முஹெய்ம் தலையால் முட்டி வெளியே தள்ளிவிட முயற்சித்தார். ஆனால் பந்து கோல் வலைக்குள் சென்று, 'சேம்சைடு' கோல் ஆனது. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என 'டிரா' ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இரண்டாவது முறையாக உலக கோப்பையில் பங்கேற்கும் கத்தார் அணி, தனது முதல் புள்ளியை பெற்றது.
ஸ்காட்லாந்து அணி கலக்கல்
பாஸ்டன்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த 'சி' பிரிவு லீக் போட்டியில் ஸ்காட்லாந்து, ஹைதி அணிகள் மோதின. இப்போட்டியை காண 64,146 பேர் வந்தனர். 28 ஆண்டுகளுக்கு பின் உலக கோப்பையில் பங்கேற்கும் ஸ்காட்லாந்து அணிக்கு 28வது நிமிடத்தில் ஜான் மெக்கின் ஒரு கோல் அடித்தார். இதற்கு, கடைசி நிமிடம் வரை போராடிய ஹைதி அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ஸ்காட்லாந்து அணி 1-0 என வெற்றி பெற்றது. இது, 1990க்கு பின் உலக கோப்பை அரங்கில் ஸ்காட்லாந்துக்கு கிடைத்த முதல் வெற்றி. கடந்த 1974க்கு பின் உலக கோப்பையில் விளையாடும் ஹைதி அணி, தனது முதல் புள்ளிக்காக இன்னும் காத்திருக்கிறது.
மேலும் செய்திகள்
-
ஸ்பெயின் அணி கலக்கல் வெற்றி; சவுதி அரேபியாவை 4-0 என வீழ்த்தியது
-
உலக கோப்பை கால்பந்து: ஐவரி கோஸ்டை வீழ்த்தி ஜெர்மனி அபாரம்
-
ஹைத்தி வெளியேற்றம்; 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றி
-
ஆஸ்திரேலியாவை அலற விட்ட அமெரிக்கா; நாக் அவுட் சுற்றுக்கு அசத்தலாக தகுதி
-
உலகக் கோப்பை கால்பந்து: தென்கொரியாவை வீழ்த்தி மெக்சிகோ அபாரம்
-
ஜோனாதன் டேவிட் 'ஹாட்ரிக்'; கத்தாரை வீழ்த்தி கனடா சாதனை வெற்றி!